ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு தீர்மானம் கோரி தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, மக்களவை செயலாளருக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இதனால், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கல், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் தமிழ்நாடு அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, கடந்த அ.தி.மு.க
இதையடுத்து, 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு, ‘தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் அவசர சட்ட மசோதா’ உருவாக்கப்பட்டு, அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டது.
ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச் சட்டம் கடந்த ஆண்டு அக்.1-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆளுநரும் ஒப்புதல் அளித்து இந்த அவசரச் சட்டம் அமலானது.
இந்த சட்டப்படி, தமிழகத்தில் பணத்தையோ, வேறு ஏதேனும் பொருளையோ வைத்து, ஆன்லைன் மூலம் நடைபெறும் சூதாட்டங்கள், விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. பணம் வைத்து ஆன்லைன் சூதாட்டம், ஆன்லைன் விளையாட்டு விளையாடினால் 3 மாதங்கள் வரை சிறை அல்லது ரூ.5 ஆயிரம் வரை அபராதம் அல்லது இவை இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு 6 மாதங்களில் சட்டப்பேரவையில் சட்டமாக நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதல் பெற்றால் மட்டுமே அந்த சட்டம் தொடரும் இல்லாவிட்டால் காலாவதியாவிடும்.
அதனால், அக்டோபரில் நடந்த சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடரில், ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்டத்துக்கு மாற்றாக, அக்.19-ம் தேதி சட்ட மசோதாவை அமைச்சர் எஸ்.ரகுபதி தாக்கல் செய்தார்.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா சட்டப்பேரவயில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
ஆளுநர் அந்த மசோதாவில் பல்வேறு விளக்கங்களை கோரினார். அதற்கு, தமிழ்நாடு அரசு 24 மணி நேரத்தில் விளக்கம் அளித்தது.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மோதாவுக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கடந்த டிசம்பர் 2-ம் தேதி ஆளுநரை சந்தித்து, வலியுறுத்தினார்.
இதனிடையே, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்களின் பிரதிநிதிகளை ஆளுநர் ரவி, சந்தித்துப் பேசியது விமர்சனத்துக்கு உள்ளானது.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் ஆளுநரிடம் 4 மாதங்களுக்கு மேல் பரிசீலனையில் இருந்த நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.
மேலும், மத்திய அரசின் கீழ் வரும் விவகாரத்தில் மாநில அரசு எந்த அடிப்படையில் சட்டம் இயற்றலாம் என்பது உட்பட 8 கேள்விகளை எழுப்பியுள்ள ஆளுநர், மசோதாவில் போதிய தரவுகளை சேர்த்தும், சில திருத்தங்களை செய்து அனுப்புமாறு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் நாளை (மார்ச்13) பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கவன ஈர்ப்பு தீர்மானம் கோரி திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மக்களவை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், மத்திய மின்னணு மற்றும் ஐடி துறை அமைச்சர் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், தமிழகத்தில் மட்டும் ஆன்லைன் சூதாட்டத்தினால், அதிகமான பணத்தை இழந்த 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எனவே, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“