அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யூ உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்கத்தினர், வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், “அ.தி.மு.க அரசியல் சூழ்ச்சியை முறியடிக்க தொ.மு.ச.வினர் பேருந்துகளை வழக்கம்போல் இயக்குவீர்” என்று தி.மு.க-வின் தொ.மு.ச அறிக்கை வெளியிட்டுள்ளார்.
போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் உடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டியூ ஆகிய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்தனர்.
அ.தி.மு.க-வின் அண்ணா தொழிற்சங்கப் பேரவை, சி.ஐ.டி.யூ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இன்று இரவு 12 மணி முதல் வேலை நிறுத்தப் போராட்டம் என்று அறிவித்ததைத் தொடர்ந்து, இப்போதே சில இடங்களில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், தி.மு.க-வின் தொ.மு.ச பேரவை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடாது என்று அறிவித்திருந்தது.
இந்நிலையில், “அ.தி.மு.க அரசியல் சூழ்ச்சியை முறியடிக்க தொ.மு.ச.வினர் பேருந்துகளை வழக்கம்போல் இயக்குவீர்” என்று தொ.மு.ச. பேரவைப் பொதுச் செயலாளர் சண்முகம் எம்.பி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு 15-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை துவக்கப்பட வேண்டும், போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அ.தி.மு.க ஆட்சியாளர்களால் வழங்கப்படாத அகவிலைப்படி உயர்வு நிலுவை, தற்போதைய 4 மாத அகவிலைப்படி நிலுவை வழங்க வேண்டும்.
ஓய்வுபெற்றோர் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீடு திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு. ஆயினும், அரசு ஓய்வுபெற்றோர் அகவிலைப்படி உயர்வு சம்பந்தமாக நல்ல முடிவு எட்டப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.
அதே நேரத்தில், போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாகத் தீர்த்து வருகிறது நமது கழக அரசு, இப்பிரச்னைகளையும் தீர்க்கும் என்ற வாக்குறுதியை ஏற்று, பொதுமக்கள் நலன்களைக் கருத்தில் கொண்டும், நமது தமிழ்நாடு முதலமைச்சரின் நல்லாட்சிக்கு களங்கம் விளைவிக்க முயலும் அ.தி.மு.க தொழிற்சங்க நடவடிக்கைகளை முறியடிக்க வழக்கம் போல், பேருந்துகளை இயக்க வேண்டுமாய் தொ.மு.ச பேரவை சார்பில், போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களை தொ.மு.ச பேரவை அன்போடு கேட்டுக் கொள்கிறது. கோரிக்கைகளைத் தீர்க்க தொ.மு.ச பேரவை துணை நிற்கும் என உறுதியளிக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“