/indian-express-tamil/media/media_files/FL5Zj2K0ttPHQNDJqavz.jpg)
ஸ்கிரிப்ட்டை மாற்ற முடியாது; கொள்கை தான் முக்கியம்; போட்டோவைக் காட்டி எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்த உதயநிதி
மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் காஞ்சிபுரத்தில் வாக்கு சேகரித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எய்ம்ஸ் விவகாரத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
காஞ்சிபுரம் தொகுதி தி.மு.க வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து அமைச்சர் உதயநிதி இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய உதயநிதி, "பிரதமர் மோடி 10 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்து வருகிறார். இதுவரை அவர் தமிழ்நாட்டிற்கு ஏதாவது ஒரு நல்ல விஷயத்தையாவது செய்துள்ளாரா? 2019இல் மதுரைக்கு வந்து எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டுகிறேன் என்று சொல்லி அடிக்கல் நாட்டினார். இன்று வரை கட்டப்படவில்லை.
நேற்று எடப்பாடி பழனிசாமி திருச்சியில் என்னைப் பற்றிப் பேசினார். சும்மா உதயநிதி கல்லைக் கல்லைக் காட்டிக் கொண்டு இருக்கிறார் என சொல்லியுள்ளார். இது தான் மோடி, எடப்பாடி, அமித்ஷா ஆகியோர் 2019இல் அடிக்கல் நாட்டும் போது வைத்த அந்த கல், அங்கே அவர்கள் வைத்தது இந்த ஒரு கல்லை மட்டும் தான். அதையும் நான் எடுத்துக் கொண்டு வந்துவிட்டேன். நீங்க அங்கே மருத்துவமனையைக் கட்டும் வரை நான் திருப்பி தர மாட்டேன், என்று கூறினார்.
மேலும், உதயநிதி ஸ்கிரிப்ட்டை மாற்றிப் பேச வேண்டும் என எடப்பாடி சொல்கிறார். நானாவது எய்ம்ஸ் கல்லைத் தான் காட்டினேன். இங்கே ஒருவர் பல்லைக் காட்டிக் கொண்டு இருக்கிறார் பாருங்க என்று சொன்ன உதயநிதி 2019 இல் எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி, அப்போதைய முதல்வர் எடப்பாடி ஆகியோர் இருந்த படத்தை எடுத்துக் காட்டினார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி, நான் ஏன் ஸ்கிரிப்ட்டை மாற்ற வேண்டும். எங்களுடைய கொள்கை இதுதான். எங்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும். நீட் தேர்வு வேண்டாம். மாநில சுயாட்சி வேண்டும். என்னால் உங்களை போல், நேரத்துக்கு தகுந்தபடி ஆளுக்கு தகுந்தபடி ஸ்கிரிப்டை மாற்றி பேச முடியாது. நீங்கள் ஓ.பி.எஸ்.,ஸிடம் ஒரு மாதிரி பேசுவீர்கள், சசிகலாவிடம் ஒரு மாதிரி பேசுவீர்கள், மோடியிடம் ஒரு மாதிரி பேசுவீர்கள். தீபாவை பார்த்தால் ஒரு மாதிரி பேசுவீர்கள், தீபாவின் டிரைவரை பார்த்தால் ஒரு மாதிரி பேசுவீர்கள். உங்களை போல மாற்றி மாற்றி பேச தி.மு.க.,க்காரன் ஒன்றும் பச்சோந்தி இல்லை. நான் கருணாநிதியின் பேரன். நான் எனது கொள்கைகளை தான் பேசுவேன். மாநில உரிமைகளை மீட்க தேவையானதை செய்வேன்" என்றும் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.