சேலம் மாவட்டம், திருமலைகிரியில் கோயிலுக்குள் நுழைந்த தலித் இளைஞரை பொது கூட்டத்தில் நிற்க வைத்து சேலம் தெற்கு தி.மு.க ஒன்றிய செயலாளர் மாணிக்கம் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்டம், திருமலைகிரி பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் பட்டியல் இன சமூகத்தை சேர்ந்த இளைஞர் பிரவீன் நுழைந்தார் என்பதற்காக திருமலைகிரி தி.மு.க ஒன்றிய செயலாளர் டி. மாணிக்கம் பொதுமக்கள் முன்னிலையில் அந்த இளைஞரை ஆபாசமாகத் திட்டி மிரட்டல் விடுத்து பேசினார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தலித் இளைஞர் கோயிலுகுள் நுழைந்தார் என்பதற்காக மிக மோசமாக ஆபாசமாக வசைபாடும் நபருக்கு தி.மு.க தலைமை ஒன்றிய செயலாளர் பொறுப்பு கொடுத்து இருப்பது வெட்கி தலை குனிய வேண்டிய செயல் எனவும், இவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் எனவும் சமூக ஊடகங்களில் பலரும் வலியுறுத்தினர்.
மேலும், தி.மு.க தலமை இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து கட்சியின் அடிமட்ட உறுப்பினர் பொறுப்பில் இருந்து விடுவித்து சமூக நீதியையும் சமத்துவத்தையும் காப்பாற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் பிற சமூக ஆர்வலர்களும் முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், சேலம் மாவட்டம், தி.மு.க ஒன்றிய செயலாளர் டி. மாணிக்கம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கி தி.மு.க தலைமை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “சேலம் கிழக்கு மாவட்டம், சேலம் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் டி. மாணிக்க, கழகக் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” என்று அறிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"