சட்டப்பேரவையில் இன்று துணை முதலமைச்சர் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்ய துவங்கியது. திமுகவினர், அதிரடியாக வெளிநடப்பு செய்தனர்.
பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில், தமிழக அரசின் 2018-19 நிதியாண்டிற்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. சட்டப்பேரவையில் இந்த பட்ஜெட்டை துணைமுதல்வரும், நிதியமைச்சருமான ஒ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார். இவர், சட்டப்பேரவையில் இதுவரை 7 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஓபிஎஸ் பட்ஜெட்டை வாசிக்க துவங்கியது திமுகவினர் அதிரடியாக வெளிநடப்பு செய்தனர். முன்னதாக சட்டப்பேரவைக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உட்பட , திமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வருகை தந்தினர்.
பெரும்பான்மை இல்லாத அதிமுக அரசு, பட்ஜெட் தாக்கல் செய்திருப்பதாகவும், காவிரி மேலாணமை வாரியம் அமைக்க மத்திய அரசு தொடர்ந்து தாமதம் ஏற்படுத்துவதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடுப்பு சட்டை அணிந்து வந்ததாக அவர்கள் விளக்கம் அளித்திருந்தனர்.
இதற்கு, தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், திமுகவினர், வருத்தத்தில் இருப்பதால் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளதாக விமர்சித்தார். இந்நிலையில், பட்ஜெட் வாசிப்பு தொடங்கியதுமே திமுகவின் வெளிநடப்பு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுக் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஸ்டாலின், “ உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி இன்று வரை காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுத்த முடிவின்படி பிரதமரை சந்திக்க அரசு முயற்சி எடுக்கவில்லை. காவிரி விவகாரத்தில் பிரதமர் சந்திக்க மறுக்கிறார், திமுக சார்பில் முதலமைச்சரிடம் சிறப்பு சட்டமன்றத்தை கூட்ட கோரிக்கை வைத்தோம். இதுவரை சட்டமன்றத்தை கூட்ட அரசு முன்வரவில்லை.
இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு இன்று சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்துள்ளது” என்று கூறினார்.