திமுக வெளிநடப்பு ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம்

வெளிநடப்பு குறித்து தி.மு.க. செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறும்போது

இந்தாண்டுக்கான தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் நேற்று தொடங்கியது. இரண்டாம் நாளான இன்றும் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இன்று கேள்வி நேரத்தின்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து உறுப்பினர்கள் பேசினர். திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்கு வாய்ப்பு அளித்தபோது, அவர் ஆளுநரின் செயல்பாடுகள் பற்றி பேசினார். அப்போது அவரது பேச்சுக்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரது கருத்தும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. இதையடுத்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்பு குறித்து தி.மு.க. செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறும்போது, “ஆளுநர் பற்றி தி.மு.க. உறுப்பினர் ஜெ.அன்பழகன் பேசும்போது பல நிலைகளில் குறுக்கீடு நடந்தது. சட்டசபை விதிகளில் ஆளுநரை விமர்சித்து பேசக்கூடாது என்றுதான் இருக்கிறது. ஆனால், ஆளுநரைப் பற்றிப் பேசக்கூடாது என்று கூறி அவர் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

இதேபோல், ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கக்கூடாது என்ற தி.மு.க. கருத்துக்களும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. அதனால் வெளிநடப்பு செய்தோம்” என்றார்.

×Close
×Close