புதுச்சேரி 30 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்றும், அப்படி இல்லாவிட்டால் இந்த மேடையிலேயே தற்கொலை செய்து கொள்ளக்கூட தயார் என்றும் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சவால் விடுத்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக திமுக புதுவை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய ஜெகத்ரட்சகனுக்கு திமுக கட்சியின் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்காக , ‘மண்ணின் மைந்தரே வருக, மக்களாட்சி தருக’ என ஜெகத்தை வரவேற்று புதுவை முழுவதும் போஸ்டர்கள் ஓட்டப்பட்டிருந்தன.
கூட்டத்தில் பேசிய அவர்," வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி தொடர்பான முடிவை தலைவர் மு.க ஸ்டாலின் அறிவிப்பார். 30 தொகுதிகளையும் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைக்கும். அப்படி இல்லாவிட்டால் இந்த மேடையிலே எனது உயிரை மாய்த்துக் கொள்வேன்" என சவால் விடுத்தார்.
தமிழகத்துடன் புதுச்சேரி யூனியன் பிரதேசமும் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது.
தமிழகத்தின் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஜெகத்ரட்சகன் வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜெகத்ரட்சகனை முதல்வர் வேட்பாளாராக களம் இறக்க போவதாக செய்திகள் வெளியாகி வந்தன.
இந்நிலையில், நிர்வாகிகள் கூட்டத்தில் ஜெகத்ரட்சகனின் பேச்சும், துணிகர சவாலும் புதுவை அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக வின் இந்த நிலைப்பாடுக்கு காரணம் என்ன?
காங்கிரஸ் கட்சி புதுவையில் ரொம்பவே பலவீனமாகிவிட்டதாக அந்த மாநில திமுக.வினர் ஸ்டாலினிடம் கூறியிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதல்வராக இருக்கும் நாராயணசாமி மீதான அதிருப்தியில் பெரும் கூட்டம் பாஜக.வை நோக்கிச் செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளும் பலமாக இல்லை. எனவே தனித்துப் போட்டியிட்டு அல்லது ஒத்த கருத்துள்ள கட்சிகளை இணைத்துக் கொண்டு திமுக.வே முதல்வர் பதவியைக் கைப்பற்ற முடியும் என எடுத்துக் கூறியிருக்கிறார்கள். ஸ்டாலினும் அதை ஏற்றுக் கொண்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .