நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக மாவட்டச் செயலாளர்கள், உயர்மட்ட பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், முதலைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக மகளிரணி நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளதால் திமுக மகளிரணி நிர்வாகிகள் குஷியாகியுள்ளனர்.
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள், உயர்மட்ட பொறுப்பாளர்களின் ஆலோசனைக்கூட்டம் காணொலி வழியாக வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மகளிர் அணிப் பொறுப்பாளர்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதன் மூலம், உள்ளூர் தலைவர்களின் மனைவிகளை மகிழ்விப்பதற்காக அவர்களுக்கு சீட் ஒதுக்கக்கூடாது என திமுக நிர்வாகிகளுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், மாவட்ட அளவில் கூட்டணி கட்சிகளுடன் சீட் பங்கீடு பேச்சுவார்த்தையை விரைவில் சுமூக தீர்வு கண்டு விரைவாக பிரச்சாரத்தை தொடங்குமாறு திமுக மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது, திமுக அரசின் சாதனைகளையும் நலத்திட்டங்களையும் மக்களிடம் எடுத்துரைக்குமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்களிடம் கேட்டுக் கொண்டார்.
உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், திமுக மகளிரணி நிர்வாகிகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும், அனைத்து அரசியல் கட்சிகளிலும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை மாவட்ட அளவிலான நிர்வாகிகளின் மனைவிகளுக்கு ஒதுக்குவது வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், மாவட்ட செயலாளர்கள், உயர் மட்ட பொறுப்பாளர்களுடன் நடத்திய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், மகளிருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக மகளிரணிக்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சரின் இந்த உத்தரவு திமுக மகளிரணி நிர்வாகிகளை குஷியாக்கியுள்ளது. மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த முடிவு திமுக மகளிரணியை வலுப்படுத்த உதவும் என்றும் இந்த நடவடிக்கை கட்சிக்கு பயனளிக்கும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”