தமிழக அரசியலில் 5 ஆண்டுகளுக்கு முன்னர், தொடர் தோல்விகளை சந்தித்த திமுக, கடந்த மக்களவைத் தேர்தல் முதல் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடர் வெற்றிகளைப் பெற்று அசுர பலத்தை வெளிப்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி உயிருடன் இருந்தபோது, முதுமையின் காரணமாக தனது அரசியல் பயணங்களை சற்று குறைத்துக்கொண்டபோதே, அவருடைய மகன் மு.க.ஸ்டாலின் திமுகவில் முழு வீச்சில் செயல்படத் தொடங்கிட்டார். அப்போதே, திமுகவில் கருணாநிதிக்கு பிறகு மு.க.ஸ்டாலின் தலைவர் என்பது உறுதியாகிவிட்டது. 2011 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு பிறகு, திமுக 2016 சட்டமன்றத் தேர்தலை, மு.க.ஸ்டாலின் தலைமையில்தான் சந்தித்தது என்று கூறலாம். மு.க. ஸ்டாலின் நமக்கு நாமே திட்டம் என்று தீவிர சுற்றுப் பயணம் செய்தபோதும், அதிமுகதான் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திமுக ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டாலும் வலுவான எதிர்க்கட்சியாக அமைந்தது. அதற்கு முன்னதாக, 2014 மக்களவைத் தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது.
இப்படி திமுக தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நிலையில், ஆகஸ்ட் 7, 2018ல் திமுக தலைவர் கருணாநிதி மறந்தார். அதே போல, அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா டிசம்பர் 5, 2016ல் மறைந்தார். தமிழக அரசியலில் இருதுருவ பெரும் தலைவர்களாக இருந்த இருவரின் மறைவு ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியது.
இப்படி 2011ம் ஆண்டு முதல் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த திமுக, மு.க.ஸ்டாலின் தலைவரான பிறகு, 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முதல் அதன் வெற்றி பயணம் தொடங்கியது.
திமுக தலைவரான மு.க.ஸ்டாலின், 2019 மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் பாஜக மற்றும் மோடி அலை அடித்தாலும் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக – காங்கிரஸ் கூட்டணி 38 இடங்களை வென்றது. இது மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பெற்ற முதல் வெற்றி.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வெற்றி பாஜகவுக்கு எதிரான மனநிலை காரணமாக வெற்றி என்று அரசியல் நோக்கர்கள் கூறினார்கள். இப்படி சொல்வதற்கான காரணம், அப்போது நடைபெற்ற இடைத் தேர்தலில் அதிமுக போதுமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்து கொண்டது.
இதையடுத்து, 2020ம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில், அப்போது ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இது மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பெற்ற 2வது வெற்றி.
இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் – மே, 2021ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதில் திமுக மட்டும் 133 இடங்களில் வெற்றி பெற்றது. மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பெற்ற வெற்றி 3வது வெற்றி இது.
முதலமைச்சரான மு.க.ஸ்டாலின், கடந்த காலங்களில் திமுக ஆட்சியில் இருந்தபோது நடந்த தவறுகள் மீண்டும் நடந்துவிடக் கூடாது என்ற எண்ணத்துடன் கட்சியையும் ஆட்சியையும் நடத்தி வருவதாக அரசியல் நோக்கர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில்தான், திமுக 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி தேர்தலை சந்தித்தது. நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக ஒரு ‘ஸ்வீப்’ அடித்து வெற்றி பெற்றுள்ளது. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவில் மாவட்ட கவுன்சிலர்கள் மொத்தம் 140 இடங்களில் 138 இடங்களை திமுக முன்னிலை வகிக்கிறது. அதிமுக 2 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
அதே போல, ஒன்றிய கவுன்சிலர்கள் 1381 இடங்களில் திமுக 994 வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக 200 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மற்றவை 139 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக பெற்றுள்ள இந்த பெரும் வெற்றி என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அசுரபலம் பெற்றுள்ளதைக் காட்டுகிறது.
இந்த வெற்றி குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஊடகங்களில் கூறுகையில், “ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் இந்த அளவுக்கு ஒரு பெரும் வெற்றியை நாங்கள் எதிர்பார்த்திருந்தாலும், மக்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறோம். இது எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் மீது அனைத்துத் தரப்பு மக்களின் நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும்.” என்று கூறினார்.
மேலும், அவர் “உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிக்கான ஐந்தாண்டு திட்டத்தை ஊக்குவிப்பதற்கான தி.மு.க அரசின் முன்மொழிவு, அனைத்து வரித் துறைகளிலிருந்தும் முழுமையான ஒத்துழைப்பு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்தது. “இந்த நடவடிக்கை உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிப்பது மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கு சிறப்பாக சேவை செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அணுகுமுறையில் ஒரு முன்னுதாரண மாற்றத்திற்கு வழிவகுக்கும்” என்று கூறினார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக 4வது தொடர் வெற்றி பெற்று மக்களின் நம்பிக்கையுடன் அசுர பலம் பெற்று நிற்கிறது. இந்த வெற்றி மு.க.ஸ்டாலின் தலைமைக்கு கிடைத்த அசுர பலம் என்றால் மிகையல்ல.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“