/tamil-ie/media/media_files/uploads/2018/02/a299-1.jpg)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தை சட்டசபையில் திறப்பது அரசியல் சட்டவிரோதம் எனவும், படத் திறப்பு நிகழ்ச்சியில் திமுக பங்கேற்காது எனவும் திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஸ்டாலின் கூறுகையில், "கடந்த 14.2.2017 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ் மற்றும் அமிதாவ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜெயலலிதா ஊழல் குற்றவாளி என்பதை தெளிவாக கூறியிருக்கிறது.
தீர்ப்பு வெளிவந்த நேரத்தில் ஜெயலலிதா உயிருடன் இல்லை என்ற காரணத்தால் மட்டுமே அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்படவில்லையே தவிர, பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா, ''ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் குற்றவாளிகளே'' என்று அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அப்படியே அட்சரம் பிசகாமல் ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.
ஆகவே, அரசியல் சட்டத்திற்கும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் விரோதமாக ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவின் படத்தை தமிழக சட்டப்பேரவையில் திறந்து வைத்து, ஏற்கெனவே அந்த மாமன்றத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படங்களின் மாண்பைக் குறைத்திடும் மாபெரும் தவறை செய்யக்கூடாது என்று பேரவைத் தலைவரை, பிரதான எதிர்க்கட்சியான திமுக சார்பில் மன்றாடி கேட்டுக் கொள்வது எனது கடமையாகும்" என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில், ஜெயலலிதா படத் திறப்பு விழாவில் திமுக பங்கேற்காது எனவும், அப்படி நிகழ்ச்சி நடக்கும் பட்சத்தில் திமுக அதனை கடுமையாக எதிர்க்கும் என்றும் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.