”ரஜினி அரசியலுக்கு வந்தால் திமுகவுக்கு எந்தவித சாதகமோ, பாதகமோ கிடையாது”, என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் சந்திப்பின் கடைசி நாளான இன்று, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், வரும் சட்டமன்ற தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து போட்டியிடுவோம் என தெரிவித்தார்.
ரஜினியின் அரசியல் வருகைகள் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ரஜினியின் அரசியல் வருகைக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "தமிழ் மண்ணை சேர்ந்தவர்கள்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும். யார் வேண்டுமானாலும் தமிழ்நாட்டில் நடிக்கலாம். ஆனால், தலைவனாக, முதல்வனாக தமிழ்நாட்டை ஆளக்கூடாது. இது மன்னர் ஆட்சி முறை அல்ல. நாங்கள் அடிமையாக இருக்க முடியாது.”, என கூறினார்.
ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ரஜினி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகள். ரஜினி அரசியலுக்கு வந்தால் திமுகவுக்கு எந்தவித சாதகமோ, பாதகமோ, கிடையாது”, என கூறினார்.