Advertisment

'ஒரே நாடு; ஒரே தேர்தல்'; உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சேர்த்தா? எதிர்ப்பு தெரிவித்து உயர் நிலைக் குழுவுக்கு தி.மு.க கடிதம்

அரசியல் சட்டத்தை சிதைக்கவோ, உருமாற்றவோ, விரைவில் மக்களால் நிராகரிக்கப்படும் பாராளுமன்ற மெஜாரிட்டி உள்ளோரின் சுயநலத்திற்கு உயர்நிலைக்குழு துணை போக கூடாது; ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க கடிதம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MK Stalin

அரசியல் சட்டத்தை சிதைக்கவோ, உருமாற்றவோ, விரைவில் மக்களால் நிராகரிக்கப்படும் பாராளுமன்ற மெஜாரிட்டி உள்ளோரின் சுயநலத்திற்கு உயர்நிலைக்குழு துணை போக கூடாது; ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க கடிதம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை கைவிடுமாறு முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழுவுக்கு தி.மு.க கடிதம் எழுதியுள்ளது.

Advertisment

தி.மு.க எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது; ஏற்கனவே 23.12.2023 அன்று சட்ட ஆணையம் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து தி.மு.க.,வின் கருத்துக்களை கோரியது. இதற்கு தி.மு.க. தன்னுடைய 12.1.2023 தேதியிட்ட கடிதத்தின் வாயிலாக "ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு" எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்குப் பிறகு நேரடி விசாரணைக்கு எந்தத் தகவலும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அனுப்பப்படவும் இல்லை. அந்த சட்ட ஆணையத்தின் கருத்துக் கேட்பு தொடர் நடவடிக்கையும் என்னவென்று தெரியவில்லை.

இதில் கவனிக்கத்தக்க முக்கிய அம்சம் என்னவென்றால், 2022ல் சட்ட ஆணையம் ஒரே நேரத்தில் பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது சம்பந்தமாகத்தான் ஆலோசனைகளைக் கோரியது. ஆனால், தற்போது மத்திய அரசு இதை விரிவுபடுத்தி பாராளுமன்ற மற்றும் மாநில சட்ட சபைகளோடு, நகராட்சிகள் மற்றும் ஊராட்சிகளையும் இணைத்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் விதமாக ஆய்வு வரம்புகளை வெளியிட்டுள்ளது. இந்தச் செயல் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும், குடியரசுத் தலைவர் முறையிலான ஆட்சியை நோக்கியும் செல்வதாகும்.

மத்திய அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்ட குழு துவக்கத்திலிருந்தே சட்டவிரோதமானது அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டதும் ஆகும்.

மேற்குறிப்பிட்ட உயர் மட்ட குழுவானது, அரசியலமைப்பு பிரிவு 73 - ன் கீழ் மத்திய அரசுக்கு அளிக்கப்பட்ட நிர்வாக அதிகாரத்தின் மூலம் அமைக்கப்பட்டதாகும். மத்திய அரசின் நிர்வாக அதிகாரம் என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு உயர்வானது அல்ல. சட்டமியற்றும் அதிகாரம் உள்ளவற்றில் மட்டும்தான் பாராளுமன்றம் நடவடிக்கை எடுக்க முடியும் என்று வகுத்துல்ல அரசியல் சட்டத்திற்கு விரோதமானதாகும் என்பதால் இந்த உயர் நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளதே செல்லாத ஒன்றாகும். மாநில அரசின் பட்டியலில் உள்ள நகராட்சிகள், பஞ்சாயத்துகளின் தேர்தல் நடைமுறை பற்றி விசாரிக்க மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள இந்த உயர்நிலைக்குழுவிற்கு அதிகாரமில்லை என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் திட்டவட்டமான கருத்தாகும். அது மட்டுமின்றி இந்த உயர்நிலைக்குழு சட்டவிரோதமானது. அரசியல் சட்டத்திற்கு புறம்பானது.

பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பின்வரும் காரணங்களால் சாத்தியமற்றது என்பதை திராவிட முன்னேற்றக் கழகம் ஆணித்தரமாகத் தெரிவித்துக் கொள்கிறது.

* ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முறை முற்றிலுமாக நடைமுறைக்கு சாத்தியமற்ற ஒன்று. அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சத்திற்கு எதிரானது. அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள "சுதந்திரமான, நேர்மையான" தேர்தலுக்கு முற்றிலும் எதிரானது. அரசியல் சட்டத்திற்கு விரோதமானது.

* ஒரே நேரத்தில் தேர்தல் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்றங்களை முன்கூட்டியே கலைக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதாலும் அப்படி கலைப்பது அரசியல் சட்டவிரோதம் என்பதாலும்- இந்த நடைமுறையை தி.மு.க எதிர்க்கிறது.

* மத்திய ஆளுங்கட்சியும் மெஜாரிட்டியை இழந்தால் ஆட்சி கவிழும். அது போன்ற நிகழ்வில் ஒரே நேரத்தில் தேர்தல் என்ற முன்னெடுப்பிற்கு மீண்டும் இடையூறு ஏற்படும் என்பதைக் கூட ஆலோசிக்காமல் "ஒரே நாடு ஒரே தேர்தல்" முயற்சி நடப்பது நடைமுறை சாத்தியமற்றது.

* ஒரே நேரத்தில் பாராளுமன்றத்திற்கும், சட்டமன்றங்களுக்கும் தேர்தல் என்பது அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சத்திற்கு எதிரானது. அச்சட்டம் வகுந்து தந்துள்ள மத்திய- மாநில உறவு அடங்கிய கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. ஜனநாயக நடைமுறையை பலவீனப்படுத்துவதாகும்.

* ஒரே நேரத்தில் தேர்தல் என்பது தேசியக் கட்சிகளுக்கும் - மாநில கட்சிகளுக்கும் இடையே தேர்தல் களத்தில் சம நிலையிலான போட்டியை ஏற்படுத்தி தராது.

* உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்த முயற்சிப்பது எழுத்தறிவு இன்னும் பெற வேண்டிய கிராமப்புற மக்கள் மத்தியில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

* ஒரே நேரத்தில் தேர்தல் என்றால் அதை எதிர்கொள்ள தேர்தல் ஆணையத்திற்கு- தேர்தல் ஆணையர் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு எல்லாம் இப்போது இருப்பது போல் 10 மடங்கு உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும். தேர்தல் அதிகாரிகளின் எண்ணிக்கை இப்போது இருப்பதை விட 3 முதல் 5 மடங்கு அதிகரிக்க வேண்டும் என்பதால் கட்டுக்கடங்காத செலவினத்தை ஏற்படுத்தும் என்பதால் இது நடைமுறை சாத்தியமற்றது.

* நகராட்சிகளும், பஞ்சாயத்துகளும் மாநில அரசின் நிர்வாக அமைப்புகள் என அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டவை. ஆகவே இவற்றுக்கும் சட்டமன்றம், பாராளுமன்றத்துடன் தேர்தல் என்பது அரசியல் சட்ட விரோதமானது. இத்தேர்தல் முழுக்க முழுக்க மாநில அரசின் நிர்வாக கட்டுப்பாட்டில் இருப்பதாகும்.

* ஒரே நேரத்தில் நகராட்சி, பஞ்சாயத்து, சட்டமன்றம், பாராளுமன்ற தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திடம் போதிய வாக்குப்பதிவு இயந்திரங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கே பல லட்சம் கோடி ரூபாயை செலவிட வேண்டிய நிதி சுமை தேர்தல் ஆணையத்திற்கு ஏற்படும் என்பதால் இந்த தேர்தல் நடைமுறையால் நிதி சிக்கனம் ஏற்படாது.

* ஓரே நேரத்தில் தேர்தலை திணிப்பதற்கு அரசியல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது மாநில உரிமை மற்றும் அரசியல் சட்டத்தால் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பறிப்பதாகும். இது மத்திய - மாநில அரசு உறவுகளில் மட்டுமல்ல மத்திய ஒன்றியத்திற்கே கடுமையான விளைவுகள் ஏற்படும் ஆபத்து மிக்க முயற்சி.

* மத்திய மாநில அரசு உறவுகளுக்கும், ஒன்றியத்திற்குமே அச்சுறுத்தலாக இருக்கும் இது போன்ற தேர்தல் நடைமுறை பற்றிய முடிவினை உயர்நிலைக்குழு விளையாட்டாக எடுத்து- அதிகாரப் பசியுடன் ஒன்றிய பா.ஜ.க அரசை திருப்திப்படுத்த நினைக்க கூடாது.

* அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கும் அரசியல் சட்டத்தை நமது அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள் சிந்தித்து நிறைவேற்றியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட அரசியல் சட்டத்தை சிதைக்கவோ, உருமாற்றவோ, விரைவில் மக்களால் நிராகரிக்கப்படும் பாராளுமன்ற மெஜாரிட்டி உள்ளோரின் சுயநலத்திற்கு உயர்நிலைக்குழு துணை போக கூடாது.

இறுதியாக, மேற்குறிப்பிட்ட அனைத்து காரணங்களால் பாராளுமன்றம், சட்டமன்றம், நகராட்சிகள், பஞ்சாயத்து ஆகியவற்றிற்கு "ஒரே நாடு, ஒரே தேர்தல்" என்ற நடைமுறையை மிக கடுமையாக எதிர்க்கிறது. ஆகவே உயர்நிலைக்குழு இது தொடர்பான தனது விசாரணையை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் - இல்லையென்றால் திராவிட முன்னேற்றக் கழகம் சட்டத்தின் வழி கொண்டு பொருத்தமான நடவடிக்கையை எடுக்கத் தள்ளப்படும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mk Stalin Dmk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment