தமிழக அரசியல்வாதிகள் என்றாலே அனைவருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது அவர்களுடைய கரை வேட்டியும் கதர்சட்டையும்தான் முதலில் நினைவுக்கு வரும். அதிலும் மினிஸ்டர் காட்டன் தமிழக அரசியல்வாதிகளுக்கு என்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஆடை என்றால் அது மிகையல்ல. ஒருவர் அரசியல்வாதியாகிறார் என்றால், கட்சிக் கொடியின் நிறத்தில் கரை வைத்த வேட்டியும் கதர் சட்டையும் அணிந்துவிட்டாலே அரசியல்வாதியின் தோரணை வந்துவிடும்.
தமிழகத்தில் முதுபெரும் அரசியல் தலைவர்களான பலரும் அரசியல் பொது நிகழ்வுகளில் வேட்டி சட்டையுடன்தான் பங்கேற்றிருக்கிறார்கள். திமுகவில் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஸ்டாலின் எல்லோரும் அரசியல் நிகழ்வுகளில் வேட்டி சட்டையுடன் பங்கேற்பதுதான் வழக்கமாக இருந்துள்ளார்கள். அதனாலேயே, வேட்டி என்பது தமிழக மக்களுடைய பாரம்பரிய ஆடையாக மட்டுமல்லாமல் அது தமிழக அரசியல்வாதிகளின் அடையாளமாகவும் பார்க்கப்பட்டது. கோட் ஷூட், பாண்ட் ஷர்ட் உடை அணிந்து சினிமாக்களில் நடித்த அதிமுகவை உருவாக்கிய எம்.ஜி.ஆர் கூட அரசியல்வாதியானபோது வேட்டி சட்டையில்தான் பொதுவெளியில் தோன்றினார்.
திமுகவிலும்கூட தற்போது முதலமைச்சராக உள்ள மு.க.ஸ்டாலின் கோட் ஷூட் போடுகிறவராக இருந்தாலும் அரசியல் மேடைகளில் வேட்டி சட்டையுடன் தான் கலந்துகொண்டுள்ளார்.
இதற்கு மாறாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் அரசியல் மேடைகளிலும் அரசியல் நிகழ்ச்சிகளிலும் பாண்ட், சட்டை அணிந்து பங்கேற்று வருகின்றனர்.
ஆனாலும், திமுக தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் பலரும் அரசியல்வாதிகளின் அடையாளமான கரை வேட்டியும் கதர் சட்டையுமாக அரசியல் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தனர். திமுகவில் கட்சியின் கடைசி பிரிவான ஒரு கிளை செயலாளர்கூட திமுக கட்சி கொடியான் சிவப்பு கருப்பு கரைவேட்டி கட்டுவதையே ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
ஆனால், திமுகவில் தற்போதுள்ள இளம் தலைவர்கள் அரசியல்வாதிக்கான பரம்பரியமான ‘கரை வேஷ்டி’யிலிருந்து விலகி, ஜீன்ஸ் அல்லது சாதாரண சட்டைகள் மற்றும் பாண்ட் மற்றும் வெள்ளை சட்டைகளை அணிந்துகொண்டு அவர்களுடைய இதயத்திற்கு அருகே பாக்கெட்டில் திமுக கொடியை குத்திக்கொண்டு நவீன உடைக்கு மாறியுள்ளனர்.
திமுகவைச் சேர்ந்த மன்னார்குடி எம்.எல்.ஏ மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா திமுக கொடியை சட்டையில் பொருத்திக்கொண்டு வலம் வருகிறார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கட்சி கொடியை என் இதயத்திற்கு நெருக்கமாக அணிய விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். அதே போல, ஜூலை 2019ல் திமுக இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்றதிலிருந்து, உதயநிதி ஸ்டாலின் ஜீன்ஸ் மற்றும் வெள்ளை சட்டை அணிந்து பாக்கெட்டில் திமுக இளைஞர் கொடியுடன் பொருத்திக்கொண்டு வலம் வருகிறார்.
அதே போல, திமுகவில் சென்னைக்கு வெளியே உள்ள சில இளைஞரணி தலைவர்கள் சென்னையில் இருக்கும்போது பாண்ட் சட்டை அணிவதை பின்பற்றி வருகின்றனர். அதே போல, சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்கள் பாண்ட் அணிவதை விரும்புகிறார்கள்.
தற்போது முதலமைச்சராக உள்ள மு.க.ஸ்டாலின் திமுக இளைஞரணி செயலாளராக இருந்தபோது, ஆரம்பத்தில், கருப்பு பாண்ட் வெள்ளை சட்டை அணிந்து அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த நிலையில், 1996ல் மேயரானபோது வழக்கத்திற்கு மாறாக வேட்டி சட்டைக்கு மாறினார். அதே போல, 2015ல் நமக்கு நாமே பிரச்சாரத்தை மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் ஸ்போர்ட்ஸ் ஆடைகளில் மக்களை சந்தித்து வலம் வந்தார்.
இன்றைக்கு, திமுகவில் இளம் தலைவர்கள் பாரம்பரியமான கரை வேட்டி, கதர் சட்டையில் இருந்து விலகி, பாண்ட், சட்டை அணிந்து கட்சியின் மீதான பற்றை வெளிப்படுத்தும் விதமாக திமுக கொடியை அணிந்து வலம் வருகின்றனர். இந்த சூழலில், திமுகவை நிறுவிய அறிஞர் அண்ணா எப்படி தோற்றமளித்தார் என்பதை திமுகவின் மூத்த தலைவர்கள் பலரும் நினைவுகூர்கிறார்கள். அறிஞர் அண்ணா, குர்தா அணிந்திருந்ததாகவும் எப்போதும் தோளில் கருப்பு சிவப்பு கரை வைத்த துண்டு அணிந்திருந்ததாகவும் கூறுகிறார்கள். அப்போது எல்லாம், திமுக கரை வேட்டி அணியாவிட்டால் திமுக நிர்வாகிகள் மேடைகளில் பேச அனுமதிக்காத ஒரு காலமும் இருந்தது என்பதை பலரும் நினைவுகூர்கிறார்கள். அதே போல, 1970களில் திமுகவில் புதிய இளைஞர்கள் வருகை நடந்தபோது தோளில் துண்டு போடும் பழக்கம் மெல்ல மறைந்ததாகக் கூறுகிறார்கள்.
தற்போது திமுக இளம் தலைவர்கள் கரை வேட்டியில் இருந்து விலகினாலும் திமுகவின் கொள்கையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு நவீன உடைக்கு மாறியிருக்கும் தோற்றம் இளம் தலைமுறையினரையும் மாநில மக்களையும் பிரதிபலிப்பதாக கூறுகிறார்கள்.
திமுகவில் பாண்ட் சட்டை அணிகிற வழக்கம் என்பது ஆரம்பத்தில் இருந்தே சில தலைவர்களால் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. நாவலர் நெடுஞ்செழியன் கோட் ஷூட் அணிபவராக இருந்தார். அதற்கு அடுத்த தலைமுறையில் டி.ஆர்.பாலு அப்படி பாண்ட் சர்ட் அணிகிற தலைவராக இருந்தார். அதனால், தற்போது திமுகவில் இளம் தலைவர்கள் கொள்கை பிடிப்புடன் ஜீன்ஸ், வெள்ளை சட்டை, அல்லது பாண்ட், சட்டை என்று நவீன உடைக்கு மாறியிருப்பதை மூத்த தலைவர்களும் இது காலத்திற்கு ஏற்ற மாற்றம் என்று கூறுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.