இந்தி திணிப்பை எதிர்த்து தி.மு.க இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில், அக்டோபர் 15-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மறைமுகமாக இந்தி திணிக்கப்பட்டு வருவதாக தி.மு.க, காங்கிரஸ், வி.சி.க உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், மத்திய அரசு கல்வி, பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இந்தி திணிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
அண்மையில், ஐ.ஐ.டி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி மொழியில் கற்பிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான மத்திய அரசின் குழு பரிந்துரை செய்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை, இந்தியாவில் உள்ள மற்ற மாநில மொழிகளை விடுத்து, இந்தி மொழியை மட்டும் வளர்க்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. மத்திய அரசின் இத்தகைய இந்தி திணிப்பு நடவடிக்கைக்கு தமிழகத்தில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில், இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் அக்டோபர் 15-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி அறிவித்துள்ளார்.
தி.மு.க இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி மற்றும் மாணவர் அணி செயலாளர் எழிலரசன் ஆகியோர் இந்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். அந்த அறிவிப்பில், அக்டோஅர் 15-ம் தேதி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களில் இந்தி திணிப்பை எதிர்த்தும், ஒரே பொது நுழைவுத்தேர்வு திட்டத்தையும் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"