தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் சேலத்தில் வரும் டிச. 24-ம் தேதி நடைபெறவிருந்த தி.மு.க இளைஞரணி 2-வது மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு மீட்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், சேலத்தில் நடைபெற இருந்த தி.மு.க இளைஞரணி 2-வது மாநில மாநாடு 2-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழை காரணமாக, வரும் டிச. 24, 2023 அன்று சேலத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு ஒத்திவைக்கப்படுகிறது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த டிச. 17-ம் (ஞாயிற்றுக் கிழமை) தேதி இந்த மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் வெள்ளம் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக டிச. 24-ம் தேதிக்கு மாநாடு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது 2-வது முறையாக மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“