சேலம் பெத்தநாயக்கம் பாளையத்தில் தி.மு.க இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு இன்று (ஜன.21) பிரமாண்டமாக தொடங்கியது. முதல்வர், தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் மாநாட்டை கட்சியின் துணை பொதுச் செயலாளர் கனிமொழி கொடியேற்றி தொடங்கி வைத்தார். லட்சக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
தொண்டர்களுக்கு வழங்க வகை வகையான உணவுகளும் தயார் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டின் நுழைவு வாயிலில் தலைவர்களின் பிரம்மாண்ட கட் அவுட், பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. மலை முகடு போன்ற நுழைவு வாயிலிலும் தலைவர்களின்
படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் #BANNEET வாசகம் இடம் பெற்றுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக 50 நாட்களில் பெறப்பட்ட 50 லட்சம் கையெழுத்துகளும் மாநாட்டில் வைக்கப்பட்டுள்ளன. இந்த கையெழுத்துகள் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
மேலும் உயிரிழந்த மாணவி அனிதாவின் நினைவாக தி.மு.க இளைஞரணி மாநாட்டுத் திடலில் நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.
இளைஞரணி மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர், தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறுகையில், "நான் வளர்ந்த, என்னை வளர்த்துவிட்ட, நான் உருவாக்கிய, என்னை உருவாக்கிய பாசறைதான் இளைஞர் அணி.
அடக்கமாக, அமைதியாக, ஓய்வின்றி உழைக்கிறேன் என நீங்கள் என்னை பாராட்டுகிறீர்கள் என்றால், அதற்கான களத்தை அமைத்துக் கொடுத்தது இளைஞர் அணிதான். தமிழ்நாட்டில் என் கால்படாத இடங்களே இல்லை என சொல்லும் அளவிற்கு பயணம் செய்தேன். திமுகவிற்கு புதிய ரத்தம் பாய்ச்சுவதற்கு இளைஞரணிதான் அடித்தளம் அமைத்தது.
நான் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதற்கு காரணமே இளைஞரணிதான். ஆற்றல் மிக்க இளைஞர்கள் என்னை சுற்றி இருப்பதால்தான் நான் சுறுசுறுப்பாக இருக்கிறேன். தற்போது இளைஞரணியை வழிநடத்த உங்களுக்கு உதயநிதி கிடைத்துள்ளார். அவரை இறுகப்பற்றிக்கொள்ளுங்கள். அவர் பொறுப்புக்கு வந்த கொஞ்ச காலத்திலேயே அசைக்க முடியாத கோட்டையாக இளைஞரணியை கட்டி எழுப்பி வருகிறார்.
வலிமையான கொள்கை, உறுதியான பிடிப்பு, இனிமையான பரப்புரை, தொடர்ச்சியான உழைப்பு இவையனைத்தும் அவரிடம் இயல்பாகவே இருப்பவை.
கலைஞர் எங்கள் மீது வைத்த நம்பிகையை நாங்கள் காப்பாற்றியது போல, என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, வெற்றிப்படையாக செயல்பட வேண்டும்" என்று வீடியோ பதிவில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“