/indian-express-tamil/media/media_files/2025/05/25/vJvp9gRHDLyT33ECHVy2.jpeg)
திருச்சி, புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக துணை முதல்வரும், தி.மு.க இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மே 23 ஆம் தேதி திருச்சி வந்தார். திருச்சியில் இருந்து புதுக்கோட்டை சென்ற உதயநிதி இரண்டு நாட்கள் புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
அதன் பின்னர் 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று (மே 24) இரவு திருச்சிக்கு வந்தார். மேலும், திருச்சியில் அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை உதயநிதி பேட்டரி காரில் சென்று பார்வையிட்டார்.
அதன் பின்னர் திருச்சியில் இரவு தங்கி ஓய்வெடுத்த உதயநிதி, இன்று திருச்சி தனியார் ஓட்டலில் நடைபெற்ற தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த ஆலோசனையின் போது உதயநிதி நிர்வாகிகளிடம் பேசியதாவது; மறைந்த கருணாநிதி பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும். அதுமட்டுமின்றி, வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. இளைஞர் அணியினர் தீவிர களப்பணி ஆற்ற வேண்டும். மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைத்து முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வருவதற்கு கடுமையாக உழைக்க வேண்டும்.
மேலும், தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நல திட்டங்களை வீடு வீடாக கொண்டு சென்று மக்களிடம் தெரிவிக்க வேண்டும். பூத் கமிட்டிகளை வலுப்படுத்தி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு இளைஞர் அணியினர் பாடுபடவேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தீர்மானம் 1: பகல்ஹாம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த அப்பாவி மக்களுக்கு, அஞ்சலி!
பகல்ஹாம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த அப்பாவி பொதுமக்களுக்கும், ஆபரேஷன் சிந்தூரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கும், தனது ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்ளும் கழக இளைஞர் அணி நிர்வாகிகளின் இந்தக் கூட்டம், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு, பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 2: வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு!
‘மக்கள் பிரதிநிதிகளால் நடத்தப்படும் சட்டப் பேரவையைவிட, ஆளுநர் என்பவர் மேலானவர் அல்ல’ என்பதை உறுதிப்படுத்தும் வகையில், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க, ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் காலவரம்பை நிர்ணயம் செய்ததுடன், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 142-ஐ பயன்படுத்தி, ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டிய 10 மசோதாக்களுக்கும், ஒப்புதல் வழங்கிய உச்ச நீதிமன்றத்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களின் உரிமைகளையும் நிலைநாட்டும் வகையில், இந்திய நீதித்துறை வரலாற்றில், முன் உதாரணமான வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பைப் பெற்றுத்தந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு இந்தக் கூட்டம், பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 3: கூட்டாட்சித் தத்துவத்துக்கு விரோதமாகச் செயல்படும் அரசியல் சக்திகளுக்குக் கண்டனம்!
மாநில உரிமைகளுக்கான மைல்கல்லாக விளங்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் வகையில், குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர், ஆகியோரைத் தவறாகப் பயன்படுத்தும் ஒன்றிய அரசையும், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையே கேள்விக்குறியாக்கும் விதமாக குறுக்கு வழியை நாடும், கூட்டாட்சித் தத்துவத்துக்கு விரோதமான சக்திகளையும், இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தீர்மானம் 4: பா.ஜ.க. அரசின் அடக்குமுறைக்கு எதிராக, சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வரும் முதலமைச்சருக்குப் பாராட்டு!
‘மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய 2,152 கோடி ரூபாய் நிதியை வழங்குவோம்’ என்ற ஒன்றிய அரசின் அடாவடிப் போக்கிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கும் முதலமைச்சரைப் பாராட்டுகிறோம்.
ஆளுநருக்கு எதிரான வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைப் பெற்றதைப் போலவே, கல்வி நிதிக்கான சட்டப் போராட்டத்திலும், சிறுபான்மையினர் நலன் காக்க, ஒன்றிய அரசின் வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டத்திலும், கழகத்தலைவர் வெற்றிபெற கழக இளைஞர் அணி சார்பில், வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தீர்மானம் 5: இந்திய ஒன்றியத்திலேயே `நம்பர்-1’ மாநிலமாக தமிழ்நாட்டைக் கட்டமைத்து வரும் திராவிட மாடல் முதலமைச்சருக்கு நன்றி!
இந்திய ஒன்றியத்தில் பல்வேறு துறைகளில் முதன்மை மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாடு 9.69% என்ற பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது.
அ.தி.மு.க.வின் 10 ஆண்டு கால இருண்ட ஆட்சியில், சராசரியாக 1.36 சதவிகிதமாக இருந்த வேளாண் வளர்ச்சி, திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பின், வேளாண் துறைக்குத் தனி பட்ஜெட் வகுத்து, சிறப்பான திட்டங்களைத் தீட்டி, செயல்படுத்தியதன் விளைவாக 5.66 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
மேலும், திராவிட மாடல் ஆட்சியின் சீரிய முன்னெடுப்புகளால் 2020-2021-ல் 26.15 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருந்த ஏற்றுமதி மதிப்பு, 2024-2025-ல் 52.07 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருமடங்காக உயர்ந்து சாதனை படைத்துள்ளது.
இப்படி அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உயர காரணமான ‘திராவிட மாடல் நாயகர்’ முதலமைச்சருக்கு இக்கூட்டம் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 6: குடிமைப்பணித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டு!
இந்த ஆண்டு வெளியான குடிமைப்பணித் தேர்வு முடிவுகளில் ‘நான் முதல்வன்- போட்டித் தேர்வு’பிரிவில் பயின்று தேர்வான 50 போட்டியாளர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இத்திட்டம் மிகச்சிறப்பாக செயல்பட காரணமாக உள்ள முதலமைச்சரையும் துணை முதலமைச்சரையும் இந்தக் கூட்டம் பாராட்டுகிறது.
தீர்மானம் 7: பொள்ளாச்சி பாலியல் வழக்கில், நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம்!
‘பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி’ என்பதற்கேற்ப, எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நூற்றுக்கணக்கான இளம் பெண்கள், அ.தி.மு.க. நிர்வாகிகளாலும், அவர்களின் ஆதரவாளர்களாலும் பாலியல் வன்முறைக்கு ஆளானார்கள். பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நோக்கத்தில், பாதிக்கப்பட்டவர்களையே மிரட்டும் வேலைகளில் எடப்பாடி பழனிசாமியின் காவல்துறை ஈடுபட்டது.
‘தி.மு.க. ஆட்சி அமைந்ததும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கும், அதற்கு கழக அரசு துணை நிற்கும்’ என்று கழகத் தலைவர் அளித்த வாக்குறுதியின்படியே, இன்று அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி உட்பட 9 பாலியல் குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருப்பதை இந்தக் கூட்டம் வரவேற்கிறது.
தீர்மானம் 8: தமிழ்நாட்டின் வரலாற்றை மறைக்கத் துடிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம்!
தமிழர்களின் நகர நாகரிகம் 2,200 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை ஆதாரபூர்வமாக நிறுவும் கீழடி அகழாய்வு அறிக்கையை ஆய்வாளர் அமர்நாத் இராமகிருஷ்ணன், 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றிய தொல்லியல் துறைக்கு சமர்ப்பித்தார். ஆனால், ஒன்றிய தொல்லியல் துறை அந்த ஆய்வறிக்கையை வெளியிடாமல், தாமதப்படுத்தியது மட்டுமல்லாமல், நாடாளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பியபோது ‘விரைவில் வெளியிடப்படும்’ என்று கூறிவிட்டு, தற்போது அந்த அறிக்கையைத் திருப்பி அனுப்பி, திருத்தங்களைக் கோரியுள்ளது.
தமிழர்களுக்கு என்று தொன்மையும் சிறப்பும் வாய்ந்த ஒரு நாகரிகமும், வரலாறும் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல், தமிழ்நாட்டின் வரலாற்றை மறைக்கத் துடிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தீர்மானம் 9: செம்மொழி நாள்
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்தநாள் விழா இந்த ஆண்டு முதல் ‘செம்மொழி நாளாக’ கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ள முதலமைச்சருக்கு இக்கூட்டம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 10: ஒன்றிய- நகர- பகுதி- பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் நியமனத்திற்குப் பாராட்டு!
களச் செயல்பாடுகள், மாவட்டச் செயலாளர்களின் பரிந்துரை, நேர்காணல்கள் என்று பல்வேறு படிநிலைகளில் மிகவும் கவனமாக பரிசீலித்து, 76 கழக மாவட்டங்களில் 12,000-க்கும் அதிகமான ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் அமைப்பாளர், துணை அமைப்பாளர்களைத் தேர்வுசெய்து இளைஞர் அணியின் கட்டமைப்பை தமிழ்நாடு முழுவதும் வலுப்படுத்திய கழக இளைஞர் அணிச் செயலாளர் – துணை முதலமைச்சர் உதயநிதிக்கு இந்தக் கூட்டம் நன்றியையும், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 11: 234 தொகுதிகளிலும் கண்டன பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ள நிர்வாகிகளுக்குப் பாராட்டு!
தொகுதி மறுசீரமைப்பு, தமிழ்நாட்டுக்கு நிதி வழங்குவதில் ஒன்றிய அரசின் பாரபட்சம், இந்தித் திணிப்பு ஆகியவற்றுக்கு எதிரான கண்டனப் பொதுக்கூட்டங்களை, தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மிகச்சிறப்பாக நடத்தி முடித்துள்ள கழக இளைஞர் அணி நிர்வாகிகளுக்குப் பாராட்டுகளையும், முழு ஒத்துழைப்பை நல்கிய மாவட்ட- ஒன்றிய- நகர- பகுதி- பேரூர் செயலாளர்களுக்கு நன்றியையும் இந்தக் கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 12: தமிழர் நலன் காத்த கலைஞரின் புகழைப் பரப்பும் வகையில் தெருமுனைக் கூட்டங்கள்!
கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களைக் கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கவேண்டும் என்றும், தமிழர் நலன் காத்த கலைஞரின் புகழ் பரப்பும் வகையிலும், திராவிட மாடல் அரசின் நலத் திட்டங்களை விளக்கியும் கழகப் பேச்சாளர்கள் மற்றும் இளம் பேச்சாளர்களைக் கொண்டு அனைத்து ஒன்றிய- நகர- பகுதி- பேரூர்களில் தெருமுனைக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும் இளைஞர் அணி நிர்வாகிகளை இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 13: களத்திற்கு நிகராக சமூக வலைத்தளங்களிலும் களமாட உறுதியேற்போம்!
நவீன அரசியலின் பரப்புரைக் களமாக உருவாகி இருக்கும் சமூக வலைத்தளங்களில், நமது இளைஞர் அணி சிறப்பாகச் செயல்பட மாவட்ட- மாநகர நிர்வாகிகளைத் தொடர்ந்து, புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர்- துணை அமைப்பாளர்களுக்கும், தொகுதிவாரியாக பாக இளைஞர்களுக்கும் சமூக வலைத்தளப் பயிற்சியை, சீரியமுறையில் வழங்கி வருகிறோம்.
கழகத்தின் கொள்கைகளையும் திராவிட மாடல் அரசின் சாதனைகளையும் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில், களத்திற்கு நிகராக சமூக வலைத்தளங்களிலும் களமாட, கழகத் தகவல் தொழில் நுட்ப அணியுடன் இணைந்து, கழக இளைஞர் அணி பணியாற்றும் என இக்கூட்டம் உறுதியேற்கிறது.
தீர்மானம் 14: இளைஞர் அணியின் எதிர்கால பணிகளை விரைந்து மேற்கொள்வோம்!
தமிழ்நாடு முழுவதும் 76 கழக மாவட்டங்களில் வார்டு, கிளைகளில் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களை நியமிப்பது, அவர்களின் மூலம் இல்லந்தோறும் சென்று புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது, சட்டமன்றத் தொகுதிகளில் திறக்கப்படாமல் உள்ள ‘கலைஞர் நூலகங்கள்’-ஐ திறப்பது ஆகிய பணிகளை, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்களின் ஒத்துழைப்புடன் விரைந்து மேற்கொள்ளுமாறு இளைஞர் அணி நிர்வாகிகளை இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 15: எல்லார்க்கும் எல்லாம் தரும் திராவிட மாடல் அரசு, மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர உறுதியேற்போம்!
முதலமைச்சர் தலைமையிலான நம் திராவிட மாடல் அரசு 2026-சட்டமன்றத் தேர்தலில் வென்று, மீண்டும் ஆட்சிப்பொறுப்புக்கு வர நம் செயலாளரின் தலைமையிலான நம் இளைஞர் அணி எல்லா வகையிலும் துணை நிற்கும் என்று இந்தக் கூட்டம் உறுதியேற்கிறது.
வெல்வோம் இருநூறு! படைப்போம் வரலாறு!!
மேற்கண்டவாறு தி.மு.க இளைஞரணி கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் இளைஞர் அணி நிர்வாகிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். தி.மு.க. மாவட்ட, மாநகர இளைஞர் அணி, அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் சுமார் 567 பேர் மற்றும் மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள் ஜோயல், கே.வி.பிரகாஷ் எம்.பி., இன்பா ரகு, இளையராஜா, அப்துல்மாலிக், ஜி.பி.ராஜா, சீனிவாசன், பிரபு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். கூட்டம் முடிவில் இளைஞர் அணி நிர்வாகிகளுடன் குழுப்படம் எடுத்துக் கொண்டார்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.