Advertisment

இந்த தருணத்தில் உதயநிதி பிறந்தநாள் கோலாகலம் அவசியமா? சலசலக்கும் திமுக

திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ஏழை எளியோர்களுக்கு உதவிகளை வழங்கி கொண்டாட திமுக தொண்டர்கள் திட்டமிட்டுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
DMK youth wing preparing to celebrate Udhayanidhi birthday, udhayanidhi stalin, dmk, - உதயநிதியின் பிறந்தநாளை கொண்டாட தயாராகும் திமுக, திமுக இளைஞரணி , திமுகவில் சலசலப்பு, உதயநிதி பிறந்தநாள், உதயநிதி ஸ்டாலின், tamil nadu politic, tamil news, udhayanidhi

திமுகவில் வாரிசு அரசியல் நடந்து வருகிறது என்று எதிர்க்கட்சிகளும் திமுக விமர்சகர்களும் தொடர்ந்து கடும் விமர்சனங்களை முன் வைத்து வரும் சூழ்நிலையில், திமுக தொண்டர்களும் இரண்டாம் கட்டத் தலைவர்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகனும் திமுக இளைஞரணி மாநில செயலாளருமான உதயநிதி பிறந்தநாளை கொண்டாடத் தயாராகி வருகின்றனர். உதயநிதியின் பிறந்தநாளை பொதுமக்களுக்கும், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவிகளை வழங்கி, இளைஞர் எழுச்சி நாளாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர். இந்த தருணத்தில் உதயநிதி பிறந்தநாள் கோலாகலம் அவசியமா என்று திமுகவில் சலசலப்பு எழுந்துள்ளது.

Advertisment

கடந்த இரண்டு வாரங்களாக, திமுக மாவட்ட இளைஞரணியும் திமுக கிளைகளும் நவம்பர் 27ம் தேதி உதயநிதியின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உதயநிதி பிறந்தநாளை கொண்டாடுவது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக திமுகவின் மாணவர் அணி நவம்பர் 21ம் தேதி இணையவழியில் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது.

திமுகவினர் உதயநிதியின் பிறந்தநாளை கொண்டாடுவது குறித்து திமுகவிலேயே இருவேறு கருத்துகள் இருப்பது தெரியவந்துள்ளது. திமுகவின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “உதயநிதியின் பிறந்தநாளை ஆரவாரமில்லாமல் கொண்டாடினால் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். ஆனால், திமுக ஆட்சியில் இருப்பதால், அவருடைய பிறந்தநாள் விழாவை பிரமாண்டமாக நடத்த நினைத்தால், அது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மழை வெள்ள பாதிப்பின்போது, மீட்பு பணிகளில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு கடுமையாக உழைத்தனர். அவர்களைப் பாராட்டி, திமுகவில் தொண்டர்களுக்கு இடம் உண்டு என்பதை தலைமை நிரூபிக்க நினைக்கிறார்கள். ஆனால், கட்சியில் ஒரு பகுதியினர், திமுக வாரிசு அரசியலை ஆதரிக்கிறது என்று நிரூபிக்க விரும்புகிறார்கள். குறிப்பாக இளைஞரணியினர் விரும்புகிறார்கள். இது முரண்பாடானது. இதுபோன்ற பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வுகளை குறைக்க வேண்டும் என தலைமை அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்” என்று கூறினார்.

சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட நிலையில், உதயநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் என்ற திமுகவின் மூத்த நிர்வாகியின் கருத்தை திமுகவின் இளைஞரணி நிர்வாகிகள் ஏற்கவில்லை. எங்களுடைய தலைவரின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடுவதில் என்ன பிரச்சனை இருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டெயினுக்குப் பிறகு கட்சியில் பெரும் கூட்டத்தை ஈர்த்தவர் உதயநிதி ஸ்டாலின். அவரது பிறந்தநாளைக் கொண்டாடி, ஆதரவற்றவர்களுக்கு உதவிகளை வழங்க உள்ளோம். மழை வெள்ள பாதிப்பின்போது உதயநிதி தனது சேப்ப்பாக்கம் தொகுதியில் மீட்பு பணிகளில் தீவிரமாக செயல்பட்டார். பாதிக்கப்பட்டவரக்ளுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார் என்று கூறினார்.

அதே நேரத்தில், அரசியல் நோக்கர்கள் உதயநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை வேறு விதமாக பார்க்கிறார்கள். “உதயநிதியின் பிறந்தநாளைக் கொண்டாடலாமா வேண்டாம் என்பது திமுக தொண்டர்களின் விருப்பம். இது குறித்து யாரும் கருத்து தெரிவிக்க ஒன்றுமில்லை. ஆனால், ஒரு கேள்வி எழுகிறது. கருணாநிதியின் மகளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரியுமான கனிமொழி பிறந்தநாளில் திமுக மகளிரணி இப்படி ஒரு கொண்டாட்டத்தை நடத்தினால், அதை திமுக தலைமை ஏற்குமா என்றால், நிச்சயமாக, அவர்கள் ஏற்க மாட்டார்கள். எனவே, உதயநிதி கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவருடைய பிறந்தநாளை பிரமாண்டமாகக் கொண்டாடுவதும், அவரை அடுத்த தலைவராக முன்னிறுத்துவதும் பலர் திமுகவை நோக்கி வருவதற்கு தடையாக இருக்கும். அதனால், திமுக இளைஞரணி உதயநிதியின் பிறந்த நாளை கொண்டாடுவது பற்றி யோசிக்க வேண்டும்” என்று கூறுகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Dmk Udhayanidhi Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment