வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், தண்டனை விவரங்களை இன்று அறிவித்தது.
பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொன்முடி தரப்பில் அதை நிறுத்தி வைக்க 60 நாட்கள் கால அவகாசம் கேட்கப்பட்டது. அதில் முதற்கட்டமாக 30 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தாண்டியும் அவகாசம் தேவைப்பட்டால் எந்த நேரத்திலும் நீதிமன்றத்தினை அணுகலாம் என்று நீதிபதி ஜெயசந்திரன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இந்த கால அவகாசத்திற்குள் உச்ச நீதிமன்றத்தினை நாடி பொன்முடி மேல் முறையீடு செய்து கொள்ள வேண்டும். ஜாமீனும் பெற வேண்டும். இல்லையெனில் சிறைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8(1)-ன்படி, ஊழல் தடுப்பு போன்ற சட்டங்களின்கீழ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தகுதி இழப்புக்கு ஆளாக நேரிடும். மேலும், ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ், தண்டனை விதிக்கப்படாமல் ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டாலும் தகுதி இழப்பு செய்யப்படுவார்கள்.
அதுபோல, இந்த வழக்கில் சிறைத் தண்டனையை அனுபவித்து விடுதலை செய்யப்பட்டாலும், அதன்பிறகு 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் பொன்முடி குற்றவாளி என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், தனது எம்.எல்.ஏ, அமைச்சர் பதவியை அவர் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திமுகவைச் சேர்ந்த ஓர் அமைச்சர் ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு, அமைச்சர் பதவியை இழக்கப் போவது இதுவே முதல்முறை.
இதற்கு முன்பு முன்னாள் அமைச்சர் செல்வகணபதி அதிமுகவில் இருந்த காலத்தில் செய்த ஊழல் வழக்கால் தண்டனை பெற்றிருந்தார்.
1991-1996 அ.தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் டி.எம்.செல்வகணபதி. இவர் மீது, சுடுகாட்டு தகன மேடைகளுக்கு மேற்கூரை அமைக்கும் பணியில் ஊழல் நடைபெற்றதாக புகாரளிக்கப்பட்டு 1997ஆம் ஆண்டு சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து, விசாரணையைத் தொடர்ந்தது. இந்த வழக்கில் கடந்த 2014ஆம் ஆண்டு செல்வ கணபதிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதனால், தனது எம்.பி பதவியை இழந்த செல்வகணபதி, தேர்தலில் போட்டியிட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இதற்கிடையே, சிறைத் தண்டனையை எதிர்த்து செல்வகணபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2014-ம் ஆண்டில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டில், செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை ரத்துசெய்யப்பட்டது.
அதேநேரம் அமைச்சர் பதவியில் இருக்கும்போதே தகுதியிழப்பை சந்திக்கும் 3வது எம்.எல்.ஏவாக பொன்முடி இருப்பார் என்கிறார்கள்.
இதற்கு முன்னதாக ஜெயலலிதாவும், அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியும் பதவியை இழந்தனர்.
தற்போதைய நிலையில் பொன்முடி, தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்விலோ அல்லது உச்சநீதிமன்றத்திலோ மேல்முறையீடு செய்ய வேண்டும்.
அப்படி மேல்முறையீடு செய்த வழக்கில் நீதிமன்றம், பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பிற்கு தடை விதிக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே பதவி தப்பும். இல்லாவிட்டால் எம்எல்ஏ பதவியும், அமைச்சர் பதவியும் பொன்முடிக்கு பறிபோகும் நிலை உள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.