/indian-express-tamil/media/media_files/2025/05/28/ssosq6M3ZBU7FtgKHliP.jpg)
டெல்லிக்கு செல்லும் தி.மு.க-வின் 3-வது பெண் கவிஞர்: யார் இந்த சல்மா?
தமிழ்நாட்டின் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை மாதத்தோடு முடிவடைய உள்ளது. கடந்த 2019, ஜூலை 25-ம் தேதி, தமிழ்நாட்டிலிருந்து 6 பேர் மாநிலங்களவை எம்.பி-க்களாகத் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில், வழக்கறிஞர் வில்சன், தொ.மு.ச பேரவைத் தலைவர் சண்முகம், புதுக்கோட்டை அப்துல்லா ஆகியோர் தி.மு.க சார்பாகவும், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தி.மு.க கூட்டணி சார்பாகவும் தேர்வாகினர். அதேபோல, அ.தி.மு.க-விலிருந்து சந்திரசேகர், அந்தக் கட்சியின் ஆதரவுடன் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாகத் தேர்வுசெய்யப்பட்டனர். இவர்களின் இடத்துக்கு தான் இப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது தி.மு.க. தனது மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் திமுக வேட்பாளர்களாக வழக்கறிஞர் வில்சன், சிவலிங்கம் மற்றும் கவிஞர் சல்மா இடம்பெற்றிருக்கிறார்கள். மேலும், ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, மக்கள் நீதி மையத்திற்கு ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது என்று அந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மநீம சார்பில், கமல் களமிறங்குவார் என அக்கட்சி செயற்குழு சார்பில் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்தவர் சல்மா. இவர் 90-களில் தொடங்கி இன்றும் கவிதைகள் எழுதி வருகிறார். 13 வயதில் தனது தோழிகளுடன் தியேட்டருக்குச் சென்று படம் பார்த்த காரணத்தால் அவரது குடும்பத்தார் அவரை தொடர்ந்து பள்ளி செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் படிப்பு பாதிக்கப்பட்டது. பின்னர், அப்துல் மாலிக் என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார்.
அப்துல் மாலிக் திராவிட பாரம்பரியம் கொண்டவர். திருமணத்துக்குப் பின் தீவிரமாக கவிதைகள் எழுதத் தொடங்கினார் சல்மா. தொடர்ந்து, அரசியல் ஆர்வத்தால் மக்கள் பணி செய்ய தொடங்கினார். சல்மா பொன்னம்பட்டி பேரூராட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். 2006 சட்டசபை தேர்தலில் மருங்காபுரி தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். பின்னர், தமிழ்நாடு சமூகநல வாரிய தலைவியாக நியமனம் செய்யப்பட்டார்,
தி.மு.க.வில் மகளிர் அணி பிரச்சாரக்குழு செயலாளராக சல்மா பணியாற்றினார். அதைத்தொடர்ந்து தற்போது செய்தி தொடர்பு பிரிவு இணைச் செயலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தற்போது தி.மு.க சார்பில் ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் முதன் முறையாக நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைக்கிறார்.
ஒரு மாலையும் இன்னொரு மாலையும், பச்சை தேவதை ஆகிய கவிதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார் சல்மா. மேலும், 2-ம் ஜாமங்களின் கதை, மனாமியங்கள் ஆகிய நாவல்களையும் எழுதியுள்ளார். சல்மா எழுதிய '2-ம் ஜாமங்களின் கதை', ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட பிறகு, ஏசியன் புக்கர் ப்ரைஸ் எனப்படும் மேன் ஏசியன் லிட்டெரரி விருதுக்காக லாங் லிஸ்ட்டில் தேர்வு செய்யப்பட்டு பெரும் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
2018-ம் ஆண்டு திராவிடர் கழகத்தின் தந்தை பெரியார் விருது சல்மாவுக்கு வழங்கப்பட்டது. தி.மு.க மாநிலங்களவை உறுப்பினராக அறிவிக்கப்பட்டிருக்கும் கவிஞர் சல்மா, இதுகுறித்துப் பேசுகையில், "மகிழ்ச்சி தி.மு.க. தலைவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்கள் பிரச்னைக்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்." எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, தூத்துக்குடி தொகுதியில் இருந்து கவிஞர் கனிமொழி நாடாளுமன்ற எம்.பி.யாகவும், தென் சென்னை தொகுதியில் இருந்து கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் நாடாளுமன்ற எம்.பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க. சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.