திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு, வந்த முதல் பிறந்தநாள் மார்ச் 1ம் தேதி கொண்டாடப்பட்டது. மு.க.ஸ்டாலினின் 69வது பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வரிசையில், மநீம தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவருடைய வாழ்த்துச் செய்தியை பிரசுரித்த திமுகவின் முரசொலி நாளிதழ் கமல்ஹாசனை மநீம் தலைவர் என்று குறிப்பிடாமல் கலைஞானி என்று பதிவு செய்திருப்பதற்கு மநீம நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தனது69வது பிறந்தநாளை மார்ச் 1ம் தேதி சிறப்பாகக் கொண்டாடினார். மு.க.ஸ்டாலின் பிறந்தநாளில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வரிசையில், நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
கமல்ஹாசன் வீடியோ மூலம் தெரிவித்த வாழ்த்துச் செய்தியை திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் பிரசுரிக்கபட்டுள்ளது. மநீம தலைவர் கமல்ஹாசன் வாழ்த்துச் செய்தியைப் பிரசுரித்துள்ள முரசொலி நாளிதழ் கமல்ஹாசனை மநீம என்ற அரசியல் கட்சியின் தலைவராகக் குறிப்பிடாமல், கமல்ஹாசனை கலைஞானி என்று குறிப்பிட்டுள்ளது.
கமல்ஹாசனின் வாழ்த்து செய்தி குறித்து முரசொலி நாளிதழில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: “தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் என் மனதிற்கு உகந்த நண்பர், திமுகவின் ட்தலைவர், என்னை ‘கலைஞானி’ என அழைத்து அன்பு காட்டிய கலைஞரின் மகன். எதிர்ப்போர் கருத்துக்கும் இடமளித்து தன் எண்ணத்துக்கும் செயலுக்கும் வலு கூட்டிச் செயல்படும் அவருக்கு என் நெஞ்சார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தன்னை விரும்புபவர்களுக்கு பிறந்தநாள் பரிசாக தனது சுயசரிதையை ‘உங்களில் ஒருவன்’ எனும் பெயரில் பல்வேறு பாகங்களாக வெளியிட இருக்கிறார்.
பிறந்தது முதல் மிசாக் கைதியாக சிறை சென்றது வரையிலான 23 வருடங்கள் இந்த முதல் பாகத்தில் இடம் பிடித்துள்ளாதாக நான் அறிகிறேன்.
சுயசரிதை என்றால் தொட்டால் சுட வேண்டும். இது குட்டிச் சூரியனின் சரிதை தகிக்காமல் இருக்காது. திருமணமான ஐந்தே மாதங்களில் மிசாக் கைதியாக அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கே அவர் பட்ட இன்னல்களை சிட்டிபாபுவின் சிறை டைரி, தோழர் தியாகுவின் சுவருக்குள் சித்திரங்கள் ஆகிய நூல்களில் ஏற்கனவே வாசித்து கண் கசிந்திருக்கிறேன்.
அவர் இன்று பெற்றிருக்கின்ற உயரம் யானை மாலை போட்டு வந்தது அல்ல பெருந்தலைவர் கலைஞரின் மகன் என்றாலும் கால் தேய உழைத்துத்தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். சொல்லப்போனால், ஸ்டாலினைப் பொறுத்தவரை, கலைஞர் தன் மைந்தனைத் திணிக்கிறார் என்ற எண்ணம் எவருக்கும் வரும் வகையில் நடந்துகொள்ளவில்லை என்பதே வரலாறு. இளைஞர் அணி செயலாளராக ஸ்டாலின் என்ற நிலை வந்தபோது முதன் முதலில் எதிர்த்தவர் கலைஞர்தான்.
அதைப் போலவே ஆயிரம் விளக்கு தொகுதியின் வேட்பாளராக ஸ்டாலின் அவர்கள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோதும், எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு பதிலாக உசேனை முன்மொழிந்தவரும் கலைஞர்தான் என்பது கண்கண்ட சிறு உதாரணங்கள்.
இந்துத்துவக் கொள்கைகளை தேசம் எங்கும் திணிக்க முற்படுகையிலும், அதிகாரத்தைத் தங்கள் வசம் குவித்து கூட்டாட்சித் தத்துவத்தை கேள்விக்குள்ளாக்குகையில் தெற்கில் இருந்து ஒலிக்கும் முக்கியக் குரல்களில் ஒன்றாகவும் ஸ்டாலின் திகழ்கிறார்.
தென்னிந்தியாவின் தவிர்க்கமுடியாத அரசியல் தலைவராக தன்னை முன்னிறுத்திக் கொண்டவருக்கு என் வாழ்த்துகள், பிறந்த நாள் வாழ்த்துகள்.” இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு கலைஞானி கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் என்று முரசொலி நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
மு.க. ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசனை கலைஞானி என்று மட்டும் குறிப்பிட்டு விட்டு மநீம கட்சியைக் கண்டுகொள்ளாமல் தவித்துவிட்டதாக மநீம நிர்வாகிகள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து மநீம-வைச் சேர்ந்த நம்மவர் தொழிற்சங்கப் பேரவைத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி குறிப்பிடுகையில், “தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளன்று காணொளி பதிவு மூலம் நம்மவர் அவர்கள் பகிர்ந்த சிறப்பான வாழ்த்துச் செய்தியை இன்று வெளியிட்டுள்ள முரசொலி நாளிதழ் "மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்" என குறிப்பிடாமல் "#கலைஞானி கமல்ஹாசன்" என குறிப்பிட்டு அவரை வெறும் நடிகராகவே மட்டும் பதிவு செய்திருப்பது ஏற்புடையதல்ல.
அவர் திரையுலக ஜாம்பவான் என்பதை கடந்து தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வரும் அரசியல் கட்சித் தலைவர் என்பதை அந்த நாளேடு மறந்து போனது வியப்புக்குரியது.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நம்மவர் தொழிற்சங்கப் பேரவைத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் முரசொலி செய்தியைப் பகிர்ந்து குறிப்பிட்டிருப்பதாவது: “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளன்று காணொலி பதிவு மூலம் நம்மவர் பகிர்ந்த சிறப்பான வாழ்த்துச் செய்தியை இன்று வெளியிட்டுள்ள முரசொலி மநீம தலைவர் கமல்ஹாசனை, மநீம தலைவர் என்று குறிப்பிடாமல் கலைஞானி என குறிப்பிட்டு அவரை நடிகராக பதிவு செய்திருப்பது ஏற்புடையதல்ல.” என்று தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.