சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்டமாக மாதவரம் பால்பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச் சாலை வரையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் 118.9 கி.மீ. நீளத்திற்கு மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்படுகின்றன. இந்தப் பாதைகளில் மெட்ரோ ரயில்களை இயக்கவும், பராமரிப்பதற்கான ஒப்பந்தத்தை டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியுள்ளது.
இந்த திட்டத்தை தொடங்குவதற்கான கூட்டம் புதன்கிழமை சென்னையில் உள்ள CMRL தலைமையகத்தில் நடைபெற்றது . இதில் DMRC நிர்வாக இயக்குனர் விகாஸ் குமார், இயக்குனர் (செயல்பாடுகள் மற்றும் சேவைகள்) அமித் குமார் ஜெயின் மற்றும் 2 மெட்ரோ நிறுவனங்களின் மூத்தஅதிகாரிகள் கலந்து கொண்டனர். ரூ.5,870 கோடி மதிப்பில் வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் விகாஸ் குமாரிடம் வழங்கினார்.
ஒப்பந்தத்தின் படி 2-ம் கட்டத்தில் உள்ள 3 வழித்தடங்கள், மூன்று பராமரிப்பு பணிமனைகள் மற்றும் பயணிகளுக்கு சேவைகளை வழங்குதல் உட்பட இயக்கம் மற்றும் பராமரிப்பு தொடர்பான அனைத்து பணிகள் வழங்கப்பட்டு உள்ளன. இதற்கான ஒப்பந்த காலம் 2-ம் கட்டத்தில் பயணிகளின் சேவை தொடங்கும் தேதியில் இருந்து 12 ஆண்டுகள் வரை செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பணிகள் திருப்திகரமாக இருப்பின் மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மாதவரம், பூந்தமல்லி, செம்மஞ்சேரி ஆகிய இடங்களில் உள்ள பராமரிப்புக் கிடங்குகளையும் DMRC நிர்வகிக்கும்.
இந்தியாவில் முதல்முறையாக மெட்ரோ சேவையை இயக்கிய அனுபவம் வாய்ந்த டெல்லி மெட்ரோ நிறுவனத்திற்கு சென்னை மெட்ரோ ரயில் இயக்கம் பராமரிப்பு வழங்கியுள்ளது சேவையின் திறனை மேம்படுத்தும் எனக் கூறப்படுகிறது. மும்பையிலும் இதேபோன்ற செயல்பாடுகளை DMRC கையாண்டு வருகிறது. அங்கு மே 2023 முதல் 10 வருட ஒப்பந்தத்தின்கீழ் 3 வழித்தடங்களை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும் DMRC பொறுப்பேற்றுள்ளது.