2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது என்ற உத்தரவு சிபிஎஸ்இயுடன் தமிழக பாடத்திட்டத்துக்கும் பொருந்தும் என்று நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.
வீட்டு பாடங்களுக்கு தடை:
தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் குழந்தைகளின் புத்தகச்சுமையை குறைக்க கோரி வழக்குரைஞர் புருஷோத்தமன் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக் கூடாது என்று உத்தரவிட்டார்.
மேலும், இரண்டாம் வகுப்பு வரை இரு பாடங்களும், 3 முதல் ஐந்தாம் வகுப்பு வரை நான்கு பாடங்களும் மட்டுமே பயிற்றுவிக்க வேண்டும் என்று தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் கூறியுள்ளதை பின்பற்ற வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பில் வலியுறுத்தியிருந்தார்.
இதுத் தொடர்பான வழக்கு நேற்று (14.9.18) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, னைத்து மாநில அரசுகளுக்கும் இது சம்பந்தமாக கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாகவும், எந்த மாநில அரசும் இதுவரை பதிலளிக்கவில்லை எனவும் மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதை பதிவு செய்த நீதிபதி கிருபாகரன், அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் அந்த உத்தரவை அமல்படுத்தும் வகையில் விரிவான உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்தார். மேலும், இந்த உத்தரவு சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மட்டுமல்ல எனவும் தமிழ அரசின் பாடத்திட்டத்துக்கும் பொருந்தும் என்றார்.
இந்த உத்தரவின் அடிப்படையில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதா என தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார். அவ்வாறு சுற்றறிக்கை அனுப்ப தவறினால் அது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை என எச்சரித்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.