சிபிஎஸ்இ 1,2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் அளிக்கக் கூடாது : நீதிபதி கிருபாகரன் உத்தரவு

ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு பென்சில் கூட அளிக்க கூடாது. ஒவ்வொரு குழந்தைகளுக்கு உற்சாகமான கற்றல் சூழலுக்கு உரிமை உண்டு.

ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் அளிக்கக் கூடாது சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் புருஷோத்தமன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கேந்திரா வித்யாலாயா பள்ளிகளில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) பாடத் திட்டத்தின்படி முதல் வகுப்பில் மூன்று பாடங்கள் மட்டுமே பயிற்றுவிக்கப்படுகிறது. ஆனால் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகள் முதல் வகுப்பில் எட்டுப் பாடங்களை பயிற்றுவிக்கின்றன.

இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் 5 முதல் 7 கிலோ எடையுள்ள புத்தகப்பைகளைச் சுமந்து செல்கின்றனர். இதனால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். மாணவர்களுக்கு படிப்பு மீதான வெறுப்பு உணர்வை இது ஏற்படுத்தும். எனவே என்சிஇஆர்டி விநியோகிக்கும் புத்தகங்களை மட்டும் தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் உட்பட அனைத்து சிபிஎஸ்இ பாடத்திட்டங்களை பின்பற்றும் பள்ளி நிர்வாகங்களுக்கு கற்பிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்பு நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் கடந்த மாதம் (ஏப்ரல்) என்சிஇஆர்டி செயலாளர் மேஜர் ஹர்ஷ் குமார், தாக்கல் செய்த பதில் மனுவில், குழந்தைகள் மத்தியில் எந்தவிதமான கல்வி பாகுபாடும் பார்க்கக்கூடாது. எந்தவொரு குழந்தைக்கும் கல்வி மன அழுத்தத்தையும் தரக்கூடாது என பள்ளிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். ஒரு குழந்தைக்கு எவ்வளவு நேரம் படிக்க வேண்டும். எவ்வளவு நேரம் கற்பிக்க வேண்டும் என்பதை வரையறுத்து தான் பாடத்திட்டம் உருவாக்கப்படுகிறது.

அதன் அடிப்படையில் ஆரம்ப கல்வியில் இருந்து இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்க கூடாது. 3 ஆம் வகுப்பிலிருந்து 5 ஆம் வகுப்பு வரை வாரத்துக்கு 2 மணி நேரம் வீட்டுப்பாடம் கொடுக்க வேண்டும். 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான நடுநிலைப் பள்ளிகளில் தினமும் ஒரு மணி நேரம் வீதம், வாரத்தில் 5 முதல் 6 மணி நேரமும், 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தினமும் 2 மணி நேரம் வீதம் வாரத்தில் 10 முதல் 12 மணி நேரம் மட்டுமே வீட்டுப்பாடம் கொடுக்கப்பட வேண்டும் என ஏற்கனவே பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புத்தகச் சுமையைக் குறைக்க முதல் மற்றும் இரணைடாம் வகுப்புகளுக்கு மொழிப்பாடம் மற்றும் கணிதம் ஆகிய இரண்டு பாடங்களையும், மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மொழிப்பாடம், சூழ்நிலையியல் மற்றும் கணிதம் ஆகிய 3 பாடங்களை மட்டுமே கற்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இவை தவிர பொது அறிவு பாடமும் கொடுக்கப்பட்டுள்ளது. என்சிஇஆர்டி ஒருபோதும் அதிகமான பாடங்களை கற்பிக்க வேண்டுமென வற்புறுத்தவில்லை. அதே போல் தனியார் பள்ளியில் விநியோகிக்கும் புத்தகங்களை வாங்க வேண்டும் என மாணவர்களை ஒருபோதும் நிர்பந்திக்கக்கூடாது.

இதுகுறித்து பெற்றோர்களும் பள்ளி நிர்வாகத்துடன் பேச வேண்டும். அதே வேளையில் எல்லா பாடங்களையும் ஒரே நாளில் கற்பிக்க வேண்டிய கட்டாயமும் கிடையாது. வாழ்க்கைக்கு தேவையான அறிவை போதிக்கும் இடமாக திகழ வேண்டிய பள்ளிகள் தரமான கல்வியை மட்டுமே கற்பிக்க வேண்டும். கல்வி ஒருபோதும் சுமையாக இருக்கக்கூடாது என்பதை தாரகமந்திரமாக வைத்து என்சிஇஆர்டி செயல்பட்டு வருகிறது. மேலும் மின்னணு வடிவிலான இ – புத்தக திட்டத்தையும் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம். இதனை கைபேசி செயலி வழியாகவும் பெற முடியும் என அந்த பதில் மனுவில் தெரிவிக்கபட்டது.

அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு இந்த வழக்கில் இன்று உத்தரவிட்ட நீதிபதி கிருபாகரன்,
குழந்தைகள் தங்களின் அடிப்படை உரிமையை பாதுகாக்க வேண்டும் அவர்களுக்கு தேவையற்ற மன அழுத்தத்தை அளிக்க கூடாது. கல்வி மாணவர்களுக்கு பெருஞ் சுமையாக அமைத்து விட கூடாது. குழந்தைகளின் அடிப்படை உரிமை படியும், மருத்துவர்கள் பரிந்துரை படியும் குழந்தைகள் குறைந்தபட்ச தூங்கும் நேரத்தை உறுதி செய்ய வேண்டும். குழந்தைகளின் போதிய தூக்கமின்மை காரணத்தால் அவர்கள் உடல் ரீதியாக மற்றும் மன ரீதியாக பாதிக்கபடுவர்கள். ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு பென்சில் கூட அளிக்க கூடாது. ஒவ்வொரு குழந்தைகளுக்கு உற்சாகமான கற்றல் சூழலுக்கு உரிமை உண்டு.

அவர்கள் எந்த மன அழுத்தம் இல்லாமல் படிக்க அவர்களுக்கு உரிமை உள்ளது. ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் அளிப்பதன் மூலம் அவர்களுக்கு மன அழுத்தம் எற்படுத்துவதேடு அவர்களின் தூங்கும் நேரம் குறைகின்றது. மேலும் குறைவான வயதுடைய குழந்தைகளுக்கு அதிகப்படியான அல்லது கல்வித்துறையால் பரிந்துரை செய்யப்படாத புத்தகங்களை படிக்க வைப்பதின் மூலம் இளம் மனதில் எதிர்மறையான விளைவுகளை அவர்களிடம் இது ஏற்படுத்தும். குழந்தைகள் அதிகப்படியான எடையை கொண்ட புத்தக பைகளை துக்குவதன் மூலம் அவர்களின் உடல் நலன் பாதிக்கபடும் என்பதை பள்ளிகளும் உணர்ந்து செயல்பட வேண்டும். எனவே இதன் காரணமாக இந்த நீதிமன்றம் கீழ் கண்ட உத்தரவுகளை பிறப்பிக்கிறது. அதன்படி, சிபிஎஸ்சி மற்றும் மத்திய கல்வி வாரிய அதிகாரிகள், அனைத்து சிபிஎஸ்சி படத்திட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் அளிக்க கூடாது.

சிபிஎஸ்சி மற்றும் என்சிஇஆர்டி அதிகாரிகள் பறக்கும் படையை அமைத்து ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பில் வீட்டுப் பாடம் அளிக்கபடுவதில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். இதனை மீறி அல்லது கல்வி வாரியத்தால் அனுமதியில்லாத பாடங்களை பயிற்றுவிக்கும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.

இதே போல் மத்திய அரசு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளில் படிக்கும் மாநில பாடத்திட்டம்/ மெட்ரிக்/ ஆங்கிலோ இந்தியன் ஆகிய பாடதிட்ட பள்ளி மாணவர்களுக்கு இதனை செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதே போல் என்சிஇஆர்டி வகுத்த விதிகளின் படி செயல்பட வேண்டும் கூடுதல் படங்களை மாணவர் மீது திணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது என்பதை அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு பரிந்துரை செய்ய வேண்டும். என்சிஇஆர்டி பாடத்திட்டத்தின் கீழ் இல்லாத பாடங்களை அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு ஒரு சுற்றறிக்கை மூலமாக புத்தக பையின் எடையை குறைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும் மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களும் பரிந்துரை செய்யாத அல்லது பாடத்தினை பயிற்றுவிப்பதை தடுக்க பறக்கும் படை அமைத்து கண்காணிக்க வேண்டும். இந்த நீதிமன்றம் உத்தரவுகளை செயல்படுத்துவது தெடர்பான நடவடிக்கைகளை எடுத்து அது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி அதன் விவரங்களை அறிக்கையாக நான்கு வாரத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி கிருபாகரன் வழக்கின் அடுத்த விசாரணை நான்கு வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

×Close
×Close