கலைஞர் நூற்றாண்டு விழாவை, கொண்டாடுவது குறித்து, தி.மு.க மாவட்ட செயலாளர்களுடன் முதல்வரும், தி.மு.க தலைவருமான ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நேற்று (ஆகஸ்ட் 5) ஆலோசனை மேற்கொண்டார். அப்போது ஸ்டாலின் பேசுகையில், கலைஞர் நூற்றாண்டு விழாவை, அவருக்குப் புகழ் சேர்க்கும் விழாவாக - பெருமை சேர்க்கின்ற விழாவாக கொண்டாட வேண்டும். கலைஞர் நூற்றாண்டு விழா, தேர்தல் பரப்புரையின் ஒரு அங்கமாகும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "கலைஞர் நூற்றாண்டு விழாவை மாவட்டச் செயலாளர்களும், அணிகளின் செயலாளர்களும் இணைந்து நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். தி.மு.க கொள்கைகளை பரப்புகிற விழாவாக கொண்டாட வேண்டும்.
மக்கள் பயன்பெறும் விழாவாக கொண்டாட வேண்டும். இது போன்ற விழாக்களின் மூலமாகதான் கழகத் தொண்டர்களுக்கு உற்சாகம் பிறக்கிறது. நமக்கு நாமே உணர்ச்சியை பெறுகிறோம். கழக நிகழ்ச்சிகள் மூலம் ஆண்டுதோறும் நம்மை கலைஞர் எப்படி உணர்ச்சி கொள்ள வைத்தாரோ, அதுபோல அவரின் நூற்றாண்டு விழாவையும் ஆண்டு முழுவதும் நடத்தி கழகத்தை எழுச்சி பெற வைக்க வேண்டும்.
அரசு சார்பிலும் விழாக்கள் நடத்தப்படும். அரசு சார்பில் நடத்துகிற நிகழ்ச்சிகளுக்கான பரிந்துரைகள் வந்திருக்கிறது. மூத்த அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அதற்கு பொறுப்பு ஏற்றுக் கொள்வார்கள். கழகத்தின் சார்பில், நாம் எழுச்சியோடு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாம் இப்போதே தயாராக வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலுக்கான அடுத்தக்கட்ட பணிகளையும் தொடங்க வேண்டும் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், பா.ஜ.கவை பொறுத்தவரையில் இது அவர்களுக்கு வாழ்வா சாவா - என்ற தேர்தல். மீண்டும் ஆட்சியை பிடிக்க எதையும் செய்வார்கள். தமிழ்நாட்டில் அவர்கள் எடுக்கின்ற முயற்சிகள் எல்லாம் தோல்வி அடைந்து இருக்கிறது. அதனால் கோபம் அதிகமாகும். நம்மை நோக்கிப் பாய்வார்கள். கடந்த காலங்களில், இதுமாதிரி பல தடைகளை சமாளித்துத்தான் நாம் வெற்றி பெற்று இருக்கிறோம். இந்த முறையும் நாம் முழுமையான வெற்றியைப் பெற வேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம்" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“