PM Narendra Modi | Tirupur | திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, “வணக்கம் எனக் கூறி தனது பேச்சைத் தொடங்கினார்.
தொடர்ந்து பேசிய நரேந்திர மோடி, “என் மண் என் மக்கள் யாத்திரை தமிழ்நாட்டை புதிய கோணத்தில் கொண்டு செல்கிறது.
நான் கடந்த காலங்களில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு யாத்திரை தொடங்கினேன். அப்போது என் மனதில் இரண்டு விஷயங்கள் நினைவில் இருந்தது.
ஒன்று லால் சவுக்கில் இந்திய தேசியக் கொடி பட்டொளி வீசி நிரந்தரமாக பறக்க வேண்டும். மற்றொன்று, சட்டப்பிரிவு 370 நீக்கப்பட வேண்டும் என்பதாகும்.
இது இரண்டும் பின்னர் நிறைவேற்றப்பட்டது. நான் வெளிநாடுகளில் தமிழ் பேசிய போதும், பாராளுமன்றத்தில் தமிழை கொண்டு சென்றபோதும் ஏன் எனக் கேட்டார்கள்.
தமிழ் அரசியல் அல்ல; என் வாழ்வியலோடு கலந்தது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பா.ஜனதா இதுவரை ஆட்சியில் இருந்தது இல்லை. ஆனால் தமிழர்களின் மனதில் ஆட்சிப் புரிகிறது.
இன்று ஊழல்வாதிகள் அஞ்சுகின்றனர். அவர்களின் ஊழல்கள் வெளிக்கொணரப்பட்டுவருகின்றன. தங்களின் நாற்காலியை காப்பாற்றிக் கொள்ள அவர்கள் மக்களை பிரித்தாளுகின்றனர்.
ஆனால் தமிழர்கள் திறமைசாலிகள். அவர்களால் உண்மையை உணர முடியும்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பா.ஜனதா தொடர்ந்து முன்னுரிமை அளித்துவருகிறது. காங்கிரஸ்-திமுக கூட்டணியில் இருந்த போது தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை விட 3 மடங்கு பணம் பாஜக கூட்டணி ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இது மட்டும் அல்ல நாட்டின் வளர்ச்சிப் பணிகளிலும் பாஜக கவனம் செலுத்திவருகிறது” என்றார்.
தொடர்ந்து, “நான் எம்.ஜி.ஆர். பிறந்த ஊரான கண்டிக்கு சென்றிருந்தேன். எம்.ஜி.ஆர்.க்கு பிறகு தமிழ்நாட்டின் நல்லாட்சியை வழங்கியவர் ஜெயலலிதா.
அவர் தமிழக மக்களோடு தொடர்பு படுத்திக் கொண்டு மக்களுக்காக வாழ்ந்தார். இன்று அனைத்து வீடுகளிலும் அவரை நினைவுக் கூர்கிறார்கள். ஆனால் திமுக இவர்களை இழிவுப்படுத்திவருகிறது” என்றார்.
இந்தக் கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம், இந்திய கல்வி மக்கள் முன்னேற்றக் கழகம் தேவநாதன் யாதவ்,
, மத்திய அமைச்சர் எல். முருகன், பாஜக மூத்தத் தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், ஹெச். ராஜா, எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், புதிய நீதிக்கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“