திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் மர்ம காய்ச்சலால் உயிரிழந்திருப்பது மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில், கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தமிழகம் முழுவதும் இதுவரை 3 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 17 பேர் உள்நோயாளியாக காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 11 வயது குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்துவந்த பயிற்சி மருத்துவர் இறந்துள்ளார். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பசும்பரா பகுதியைச் சேர்ந்தவர் சிந்து (23). இவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 வருட மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு, பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இவருக்குக் கடந்த இரண்டு நாட்களாக கடுமையான காய்ச்சல் இருந்து வந்தது.
இதனையடுத்து, கடந்த புதன் கிழமை காலை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட ரத்த மாதிரியில் டைபாய்டு காய்ச்சல் என்றும் டெங்கு காய்ச்சல் இல்லை என்றும் முடிவு வந்துள்ளது.
மேலும், சிந்துவின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு வேறு ஏதேனும் வைரஸ் காய்ச்சல் இருக்குமா என்பதை பரிசோதிப்பதற்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த ரத்த மாதிரி முடிவு வருவதற்கு முன்பே சிந்து சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து அவரது உடல் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு சொந்த மாநிலமான கேரள மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பயிற்சி மருத்துவர் சிந்துவின் மறைவு சக பயிற்சி மருத்துவர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய சக மருத்துவர்கள் கதறி அழுதனர்.
இதனிடையே, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பொறுப்பு முதல்வர் அமுதவடிவு உத்தரவின்பேரில், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் தங்கி இருந்த குடியிருப்பு மற்றும் விடுதிகளில் அனைத்து இடங்களிலும் தெளிப்பான் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
திருச்சியில் இன்று ஒரு இளம்பெண் மர்ம காய்ச்சலுக்கு இறந்திருக்கின்றார். அதேபோல் திருவாரூரில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் இறந்த சம்பவம் டெல்டா பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.