முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் விவாதங்களை உருவாக்கியிருக்கிறது. ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அக்டோபர் 20-ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. சென்னையை அடுத்த மதுரவாயலில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். நிகர்நிலைப் பல்கலைக்கழகம் இந்த கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்குகிறது.
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் தமிழக அரசியல் தலைவர்களுக்கு கவுரவப் பட்டம் வழங்குவது புதிதல்ல. முன்னாள் முதல்வர்களில் கருணாநிதி 4 டாக்டர் பட்டமும், எம்.ஜி.ஆர் இரு டாக்டர் பட்டங்களையும், ஜெயலலிதா 5 டாக்டர் பட்டங்களையும் பெற்றிருக்கிறார்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 2017-ல் அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து டாக்டர் பட்டம் பெற்றார்.
எனினும் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுவது கூடுதல் சர்ச்சைகளை உருவாக்கி இருக்கிறது. முதல்வருக்கு டாக்டர் பட்டம் வழங்கும் எம்.ஜி.ஆர். நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருப்பவர் ஏ.சி.சண்முகம். இவர் அதிமுக கூட்டணிக் கட்சியான புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஆவார்.
வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அண்மையில் அதிமுக.வின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு, குறைந்த வாக்குகளில் தோற்றார் ஏ.சி.சண்முகம். ஒருமுறை அங்கு தேர்தல் ரத்தானாலும்கூட, இடைத்தேர்தலிலும் அவருக்கே போட்டியிடும் வாய்ப்பை அதிமுக வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில்தான் அவரது தலைமையிலான பல்கலைக்கழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுவது விவாதங்களை உருவாக்கியிருக்கிறது.
‘12-ம் வகுப்பே படித்த எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டமா?’ என சமூக வலைதளங்களில் சிலர் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். அதற்கு அதிமுக ஆதரவாளர்கள் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் இந்த விவகாரம், சூடான விவாதம் ஆகியிருக்கிறது.