இந்திய அரசு கச்சத்தீவை இலங்கை அரசுக்கு அளித்த நாளில் கச்சத்தீவு பிரச்னையை பாஜகவைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதி டாக்டர் ஹண்டே டைமிங்காக எடுத்துப் பேசியுள்ளார். இவருடைய வீடியோவைப் பகிர்ந்த அதிமுக நிர்வாகிகள் கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
டாக்டர் ஹெச்.வி.ஹண்டே தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதி, 93 வயதாகும் ஹண்டே முதலில் ராஜாஜி தலைமையிலான சுதந்திரா கட்சியில் இருந்தார். 1967 மற்றும் 1971ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் சுதந்திரா கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றார். 1980ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்டு மிகவும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் 10 ஆண்டுகள் சுகாதாரத் துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.
இதையடுத்து, பாஜகவில் சேர்ந்த டாக்டர் ஹண்டே 2004ம் ஆண்டு பாஜகவின் தேசிய கவுன்சில் உறுப்பினர் ஆனார். 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.
ராஜாஜி, அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் காலத்தில் இருந்தே அரசியலில் இருந்துவரும் டாக்டர் ஹண்டே தீவிர எம்.ஜி.ஆர் ஆதரவாளராகவும் தீவிர கருணாநிதியின் விமர்சகராகவும் இருந்து வந்துள்ளார். அண்மையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது உடல்நிலையை கவனித்துக்கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார். முதுமை காரணமாக ஓய்வெடுத்து வரும் டாக்டர் ஹண்டே சமூக ஊடகங்களில் அரசியல் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில்தான் டாக்டர் ஹண்டே, ஜூன் 128, 1974ம் ஆண்டு பிரதமராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இந்திராகாந்தி கச்சத்தீவை இலங்கை பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயகே கையில் தேவையில்லாமல் தாரைவார்த்துக் கொடுத்தார். அதனால், இன்றைக்கு ஆயிரக் கணக்கான மீனவர்கள் உயிர்தியாகம் செய்து வருகிறார்கள் என்று கச்சத் தீவை இலங்கை அரசுக்கு கொடுக்கப்பட்ட ஜூன் 28ம் தேதியில் சுட்டிக் காட்டியுள்ளார்.
டாக்டர் ஹண்டே வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: “ஜூன் 28ம் தேதி 1974ம் ஆண்டு அன்றைக்கு பிரதமராக இருந்த இந்திராகாந்தி கச்சத்தீவை தேவையில்லாமல் இலங்கை பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயகே கையில் தாரைவார்த்துக் கொடுத்த நாள். இது ஒரு துரதிருஷ்டவசமான நாள். இதனுடைய விளைவாக நாம் இன்றைய தினம் வரையில் ஆயிரக் கணக்கான மீனவர்களின் உயிரை நாம் தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது. இந்த விஷயத்தில் இந்த கொடுமையான தவறு செய்தது காங்கிரஸ் கட்சி, இதனுடைய நாயகி இந்திராகாந்தி அம்மையார் என்ற விஷயத்தை மக்கள் மத்தியில் எடுத்துக் கூறுவது நமது கடமை. இதனை நாடாளுமன்றத்தில் தட்டிக் கேட்டவர் ஒரே ஒரு தலைவர் அவர்தான் அடல் பிஹாரி வாஜ்பாயி அவர்கள். இதனையும் நாம் மனதிலே கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.
டாக்டர் ஹண்டே பேசிய விடீயோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், “கச்சத்தீவை தாரை வார்த்து விட்டு கச்சத்தீவை மீட்போம் என்பதா? 28/6/1974ல் இதே நாளில் காங்கிரஸ் அரசு கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததன் விளைவாக தமிழக மீனவர்கள் உயிரை இழந்து வருகிறார்கள்.அன்று தமிழகத்தை ஆட்சி செய்த திமுகஅரசு அன்றே எதிர்த்திருந்தால் இன்று மீனவர்கள் உயிரிழக்க நேராது.” என்று திமுகவை விமர்சித்துள்ளார்.
ஜெயக்குமாரின் பதிவை ரீ ட்வீட் செய்துள்ள, அதிமுக ஆதரவாளர்கள், “அன்று மாநில உரிமைகளை மத்தியில் பறிகொடுத்துவிட்டு, இன்று மாநில உரிமைகளை நிலை நாட்டுவோம், ஒன்றியரசு என்றுதான் அழைப்போம் என திமுக வேஷம் போடுவதை பார்க்கும்போது நகைச்சுவையாக உள்ளது.” என்று திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.