தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சனையை சரி செய்ய ஜே.பி.நட்டா நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அண்ணாமலை தலைமையில் நடைபெறும் நடைபயணத்தில் அ.தி.மு.க, பா.ஜ.க, புதிய தமிழகம் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. ஆனால் மக்கள் விரோத தி.மு.க ஆட்சியை அகற்ற தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டி உள்ள நிலையில், தற்போது கூட்டணிக்குள் உள்ள கட்சிகளிடையே மனக்கசப்பு ஏற்பட்டு வார்த்தைப்போர் தொடங்கியுள்ளது. இதை யார் முதலில் ஆரம்பித்தார்கள், யார் தொடங்கி வைத்தார்கள் என்று ஆராய்வது சரியானது அல்ல. கூட்டணி ஒன்றுபடுவதே முக்கியம்.
கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில், அமித் ஷா மற்றும் ஜே.பி.நட்டாவிடம் சென்னையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பு கூட்டத்தை நடத்த வலியுறுத்தினேன். அது தற்போது வரை நடைபெறாததால், கூட்டணிகள் இடையே சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. எனவே ஜே.பி.நட்டா விரைவில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தை கூட்ட வேண்டும். இதுதொடர்பாக ஜே.பி.நட்டாவை சந்திக்க முயற்சித்து வருகிறேன். தமிழகத்தில் கூட்டணிகளில் இடையே ஒற்றுமையை உறுதிப்படுத்த டெல்லி தலைவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த கால விஷயங்களை பேசுவது தேவையற்றது. தி.மு.க ஆட்சியை அகற்றுவதே நோக்கம். 2024 தேர்தல் வெற்றியே முக்கியம். எனவே கூட்டணி கட்சிகளுக்குள் பிரச்சனைகள் அதிகரிப்பதற்கு முன்பே ஜே.பி.நட்டா விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளியிலிருந்து கூட்டணியை கலைக்க முயற்சிகள் நடக்கின்றன. எனவே கூட்டணி கட்சிகள் விழித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“