பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம் வளையமாதேவி பகுதியில் என்.எல்.சி விரிவாக்கத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப் படுவதைக் கண்டித்து நெய்வேலியில் நடைபெற்ற போராட்டத்தின் நிறைவில் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கைது செய்யப்பட்டதும், அதைத்தொடர்ந்து பா.ம.கவினர் மீது நடத்தப்பட்ட தடியடி உள்ளிட்ட தாக்குதல்களும் கண்டிக்கத்தக்கவை. மண்ணைக் காக்க அறவழியில் நடத்தப்படும் போராட்டத்தை அடக்குமுறை மூலம் ஒடுக்க அரசும், காவல்துறையும் முயன்றால் அவர்களுக்கு தோல்வியே கிடைக்கும்.
காவிரிப் பாசனப் பகுதிகளின் அங்கமான சேத்தியாத்தோப்பு பகுதியில், நன்றாக விளைந்து கதிர்விடும் நிலையில் உள்ள நெற்பயிர்களை இராட்சத எந்திரங்களைக் கொண்டு அழித்து நிலங்களை கைப்பற்றிய என்.எல்.சி நிறுவனம் மற்றும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் அடக்குமுறையையும், அத்துமீறலையும் மனசாட்சியுள்ள எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
என்.எல்.சி நிறுவனத்தின் அத்துமீறலைக் கண்டித்து தான் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை எடுத்த முடிவின் அடிப்படையில் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் நெய்வேலி என்.எல்.சி நுழைவாயிலில் அறப்போர் நடத்தப்பட்டது.
பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட போதிலும், போராட்டம் மிகவும் கட்டுப்பாட்டுடன் நடத்தப்பட்டது. போராட்டத்தில் பேசி முடித்த பிறகு என்.எல்.சியை முற்றுகையிட அன்புமணி இராமதாஸ் தலைமையில் பா.ம.கவினர் முயன்ற போது, அதை காவல்துறை அனுமதித்திருக்க வேண்டும்.
ஆனால், என்.எல்.சி நிறுவனத்தின் ஏவலர்களாக மாறி மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களையும், அவருடன் சென்ற பா.ம.க.வினரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
அதனால், பதற்றம் அதிகரித்த நிலையில், பா.ம.க. தொண்டர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்தியது தான் நிலைமை மோசமடைய காரணம் ஆகும். பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த ஒரு தொண்டரை பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் சூழ்ந்து கொண்டு கண்மூடித்தனமாக தாக்கினார்கள்.
அவரது ஆடைகள் கிழித்தெறியப்பட்டன. அந்தக் காட்சிகள் அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பப் பட்டன. அதைத் தொடர்ந்தே பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிராகவும், மண்ணையும், மக்களையும் காப்பதற்காகவும் பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய போராட்டத்தைக் கையாள்வதில் காவல்துறையினரின் அணுகுமுறையும், அத்துமீறலும் கண்டிக்கத்தக்கவை. இத்தகைய சீண்டல்களின் மூலம் பா.ம.க. போராட்டத்தை அடக்கி விட முடியாது.
பாட்டாளி மக்கள் கட்சி முன்னெடுத்திருப்பது என்.எல்.சி என்ற ஒற்றை நிறுவனத்திற்கு எதிரான போராட்டம் அல்ல. தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்; சுற்றுச்சூழலை காப்பாற்ற வேண்டும்; புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த வேண்டும்; இவை அனைத்திற்கும் மேலாக கடலூர் மாவட்ட மண்ணையும், மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக நடத்தப்படும் போராட்டம் ஆகும். இந்தப் போராட்டத்தில் இறுதி வெற்றி கிடைக்கும் வரை பா.ம.க.வின் போராட்டம் தொடரும்.
மக்களின் உணர்வுகளை மீறி அவர்களின் மண்ணைப் பறிக்க முயன்றால் என்ன நடக்கும்? என்பதற்கு மேற்கு வங்க மாநிலத்தின் நந்திகிராம் மற்றும் சிங்கூர் அனுபவங்கள் தான் சான்று. அந்த அனுபவத்தில் இருந்து தமிழ்நாடு அரசும், என்.எல்.சி நிறுவனமும் பாடம் கற்றுக் கொண்டிருக்க வேண்டும்.
ஆனால், மண்ணின் மகத்துவம் குறித்தும், மக்களின் உணர்வுகள் குறித்தும் எதையும் அறியாத என்.எல்.சியும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் உணவு வழங்கும் பூமித்தாயை எந்திரங்களைக் கொண்டு பிளந்தெறிந்த காட்சியை சகித்துக்கொள்ள முடியாது. இத்தகைய அத்துமீறல்களுக்கு தமிழக அரசு துணைபோகக்கூடாது.
தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறிவிட்ட நிலையில் என்.எல்.சி நிறுவனம் இனி தேவையில்லை. உடனடியாக அந்த நிறுவனத்தை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பது தான் கடலூர் மாவட்ட மக்களின் விருப்பம் ஆகும். இதை தமிழக அரசு புரிந்து கொண்டு மக்களின் பக்கம் நிற்க வேண்டும். மாறாக என்.எல்.சியின் அத்துமீறல்களுக்கு துணை போகக் கூடாது.
மீண்டும், மீண்டும் நான் கூற விரும்புவது என்னவென்றால் பாட்டாளி மக்கள் கட்சி அடக்குமுறைகளை எதிர்கொண்டு வளர்ந்த கட்சி. கைது, தடியடி, கண்ணீர்புகை குண்டு வீச்சு போன்ற அடக்குமுறைகளை ஏவுவதன் மூலம் பா.ம.க.வை கட்டுப்படுத்த முடியாது.
வேளாண் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுவது கைவிடப்பட வேண்டும்; என்.எல்.சி. நிறுவனம் தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து ஒரு போதும் பின்வாங்காது. இறுதி வெற்றி கிடைக்கும் வரை அறவழியில் போராட்டம் தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.