சென்னையில், நேற்றைய தினம் 2 அரசு மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
சென்னை, கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வந்த பாலாஜி என்ற மருத்துவரை, விக்னேஷ் என்ற இளைஞர் சரமாரியாக கத்தியால் குத்தினார். தனது தாயாருக்கு முறையாக சிகிச்சையளிக்கவில்லை எனக் கூறி மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் தாக்குதல் நடத்திய இளைஞரை, அரசு வளாகத்திற்குள்ளேயே போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய போது, அவருக்கு 15 நாள்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
மற்றொரு புறம், சென்னை ராயபேட்டையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மனநல மருத்துவர் ஹரிஹரன் என்பவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பரத் என்ற சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர், மருத்துவ ஆலோசனைக்காக வருகை தந்திருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக மனநல மருத்துவர் ஹரிஹரனை, பரத் கடுமையாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றார். இதில் படுகாயமடைந்த மருத்துவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். இதனிடையே மனநலம் பாதிக்கப்பட்ட பரத், மருத்துவர் ஹரிஹரனிடம் கடந்த ஓராண்டாக சிகிச்சை பெற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பரத்தை ஆஜர்படுத்திய போது, அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டது.
அதன்பேரில், பரத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஒரே நாளில் அரசு மருத்துவமனை வளாகத்திலேயே 2 மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம், மருத்துவ பணியாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்தக் கோரி மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“