உலகம் முழுவதும் கொரோனா நோய் தொற்றானது தற்போது பி எப் 7 என்று உருமாறி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக சீனாவில் பிஎப் 7 அகோரத் தாண்டவமாடி வருகிறது. இதுபோல, அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளிலும் இந்த தொற்று பரவி வருவதால், உலக சுகாதார நிறுவனம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தி உள்ளது.

மத்திய அரசும் இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுரை வழங்கி உள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முதல்வர் உத்தரவிட்டார். இது தொடர்பாக அரசு உயர் அதிகாரிகளுடனும் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.

அதை்தொடர்ந்து , தமிழக முழுவதும் உள்ள தலைமை அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு வார்டுகள் ஒதுக்கப்பட்டு பணியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் இன்று கொரோனா நோய் தொற்று சிகிச்சை மையம் தயார் செய்யப்பட்டு, நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சைக்கு வரும்போது செயல்படுத்த வேண்டிய முதல் கட்ட உதவிகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் நோய் தொற்று பாதிக்கப்பட்ட நோயாளி சிகிச்சை மையத்திற்குள் கொண்டு வரப்பட்டவுடன் அவருக்கு பல்ஸ் மற்றும் ஆக்சிஜன் அளவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து உடனடியாக அவருக்கு ஆக்சிஜன் வாயு அளிப்பது மற்றும் அவரின் உடல்நிலை சீராக உள்ளதா என்பதை ஆராய்வது உள்ளிட்ட முதல் கட்ட பணிகள் நடைபெற்றது.

இந்த செயல்முறை விளக்க பணிகளின்போது அரசு மருத்துவமனை டீன் நேரு, மருத்துவக் கண்காணிப்பாளர் அருண் ராஜ் உள்ளிட்ட மருத்துவர்கள் மேற்பார்வையில் நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், களப்பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து கி.ஆ.பெ. விஸ்வநாதன் அரசு மருத்துவக்கல்லூரி, அரசு பொது மருத்துவமனை டீன் நேரு தெரிவிக்கையில்; உலகம் முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், தமிழகத்தில் முற்றிலும் கொரோனாவை தடுக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு முடக்கி விட்டிருக்கின்றது.

தமிழக அரசின் உத்தரவிற்கிணங்க கொரோனா தடுப்பு ஏற்பாடுகள் தற்போது அரசு பொதுமருத்துவமனையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 50 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 50 சாதாரண படுக்கைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 25 தீவிர படுக்கை வசதிகளும் உள்ளது.
தற்போது பரவி வரும் BF-7 கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கு போதுமான அனைத்து வசதிகளும் திருச்சி அரசு மருத்துவமனையில் தயார் நிலையில் உள்ளது.

மேலும், சிகிச்சைக்காக அனுமதிக்க படக்கூடிய நோயாளிகளுக்கு போதுமான ஆக்சிஜன் தேவையும் தற்போது அரசு மருத்துவமனையில் தயார் நிலையில் உள்ளது. இந்த கொரோனா சிகிச்சை பிரிவை கண்காணிக்க 250 மருத்துவர்கள், செவிலியர்கள் 200 பேரும், தயார் நிலையில் உள்ளனர். மேலும் காலை 7 மணி முதல் மாலை 6 வரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணிகள் நடைபெற்று வருகிறது. திருச்சி அரசு மருத்துவமனையில் மட்டும் நாள் ஒன்றுக்கு சுமார் 250 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
திருச்சி அரசு பொது மருத்துவமனையில் இன்று (டிசம்பர் 27) திடீரென ஆம்புலன்ஸ் வேகமாக வருவதும், முழு கவச உடையில் மருத்துவர்கள் செவிலியர்கள் பரபரப்புடன் இறங்கி அங்கும் இங்கும் ஓடியதும், ஆம்புலன்சில் கொரோனா நோயாளி இருப்பது போல் ஒருவரை அமர வைத்து அவருக்கு கொரோனா சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் ஊழியர்கள் ஓடிவந்து முன்னேற்பாடுகளை நடத்தியதால் பொதுமக்கள், நோயாளிகள் என்னது திருச்சி மருத்துவமனையில் கொரோனாவா, ஓடு ஓடு என தெரித்ததும், பின்னர் ஓத்திகை என்றதும் தங்களை அசுவாசப்படுத்திக் கொண்டதால், பரபரப்பாய் இருந்தது திருச்சி அரசு மருத்துவமனை வளாகம்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“