மருத்துவர்கள், நோயாளிகளுக்கு மருந்து சீட்டுகளை (prescriptions) எழுதித் தரும் போது மருந்துகளின் பெயரை ‘கேப்பிட்டல் எழுத்துகள்’ (CAPITAL LETTERS) எனும் பெரிய ஆங்கில எழுத்துகளில்தான் இனி எழுதித் தர வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
பொதுவாகவே டாக்டர்கள் நோயாளிகளுக்கு மருந்துச் சீட்டில் எழுதித் தரும் மருதுகளின் பெயர்கள் புரிவதில்லை என்ற கருத்து இருந்து வருகிறது. சில டாக்டர்கள் எழுதித் தரும் மருந்துச் சீட்டில் உள்ள எழுத்துகள் மருந்துக் கடைக்காரருக்கும் அவருக்கும் புரியும் விதமாக கிறுக்கி வைத்திருப்பார்கள். பொறுமையாக எழுதுவதற்கு நேரமில்லையா, அல்லது டாக்டர்கள் வேறு ஏதாவது சங்கேத மொழியில் எழுதுகிறார்களா என்ற கேள்விகளை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எழுப்பி வந்தனர். டாக்டர்கள் நோயாளிகளுக்கு எழுதித் தரும் மருந்துச் சீட்டு, படிக்கத் தெரிந்த அனைவரும் படித்து தெரிந்துகொள்ளும்படி தெளிவாக எழுத வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்களும் மருந்தாளுநர்களும் நீண்ட நாட்களாக முன்வைத்து வருகின்றனர்.
மருத்துவர்கள் தெளிவில்லாமல் கிறுக்கி எழுதுவதால் மருந்தாளுநர்களுக்கும்கூட குழப்பம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. கடந்த சில ஆண்டுகளாக இந்த புகார் தீவிரமடைந்து வந்த நிலையில், இது குறித்து தொடரப்பட்ட ஒடிசா உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கி, மருத்துவர்கள் எழுதித் தரும் மருந்துகள் மற்றும் பரிந்துரைகள் உள்ளிட்டவை புரியும் வகையில் தெளிவாக எழுதப்பட வேண்டும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்க தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவு பிறப்பித்தது.
ஒடிசா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் தேசிய மருத்துவ கவுன்சில் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. மேலும், மருத்துவர்கள் நோயாளிகளுக்கு புரியும் வகையில் மருந்துகளின் பெயர்களை எழுதித் தர வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், தாங்கள் எழுதித்தரும் மருந்துச்சீட்டில் இடம்பெறும் மருந்துகளின் பெயர்களை, நோயாளிகளுக்கு புரியும் வகையில், தெளிவாக, ‘கேப்பிட்டல் லெட்டர்’எனும் பெரிய ஆங்கில எழுத்துகளில்தான் இனி எழுத வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மருத்துவர்கள் நோயாளிகளுக்கு மருந்துச் சீட்டில் எழுதித்தரும் மருந்துகளின் பெயர்களை ‘கேப்பிட்டல் லெட்டர்’-ல்தான் எழுதித் தர வேண்டும் என்ற தமிழக சுகாதாரத்துறையின் இந்த உத்தரவை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் மற்றும் மருந்தாளுநர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“