இந்தியத் தொல்லியல் ஆய்வகம் சென்னைப் பிரிவு மத்திய தொல்லியல் ஆய்வக இயக்குநர் அலுவலகத்துக்கு இன்னும் மூன்று தொல்லியல் பதிவு அதிகாரிகளை நியமிக்குமாறு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறது. இக்கடிதம் பத்து நாட்களுக்கு முன்பு அனுப்பப் பட்டது என்று சென்னை தொல்லியல் ஆய்வகத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில வருடங்களாகவே, கோயில் சிலை மற்றும் வரலாற்று தொல்லியல் பொருட்கள் நாடு கடத்தப் படுகின்றன என்ற செய்திகளை நாம் கடந்து வந்திருப்போம். இது போன்ற முறைகேடுகளைத் தவிர்க்க, அனைத்து பழமை பொருட்களையும், கோயில் சிலைகளையும் முறைப்படி பதிவு செய்ய மத்திய அரசால் திட்டம் போட்டு செயல் படுத்தப்பட்டு வருகின்றன ( National Mission on Monuments and Antiquities). சில வருடத்திற்கு முன்பு வரை அந்தந்த மாநில அரசாங்கங்கள் மட்டுமே தொல்லியல் பொருட்களை பதிவு செய்து வந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
தமிழகத்தில் மட்டும் இதுவரை 45,000 கலைப் பொருட்கள் இந்து சமய அறநிலை துறையால் ஆய்வு செய்யப்பட்டு, பதிவும் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இன்னும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சாமி சிலைகள், சிற்பங்கள் பதிவு செய்யப்பட வேண்டிய சூழ்நிலை உள்ளது.
ஒரேயொரு துணை கண்காணிப்பு தொல்பொருள் ஆய்வாளர் மட்டும் தற்போது இந்த லட்சத்திற்கும் மேற்பட்ட சிலைகள் பதிவு செய்து வருகிறார். தமிழகத்தில் மட்டும் 36,000 கோயில்கள் உள்ளன. ஒரேயொரு ஆய்வாளர் இதையெல்லாம் பதிவு செய்யும் முயற்சியை மேற்கொள்வது கனவிலும் எட்டாத காரியம்.
எனவே தான், சென்னை தொல்லியல் ஆய்வகம் மேலும் மூன்று அதிகாரியை நியமிக்குமாறு கடிதம் போட்டுள்ளனர். 1970 களில் தமிழக அராங்கம் ஏழு பதிவு அதிகாரியை நியமித்து 40,000 க்கும் மேற்பட்ட கலை பொருட்களை பதிவு செய்திருந்தது . சில, வருடங்களுக்கு முன்பு தான் பதிவு செய்யும் அதிகாரத்தை மத்திய அரசு தன்னிடம் கொண்டு வந்தது என்பது குறிப்பிடத் தக்கது.