தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்களின் பட்டியல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நவம்பர் 6-ஆம் தேதி (திங்கள் கிழமை) தாக்கல் செய்யப்படது.
அரசு மருத்துவ கல்லூரிகளில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட அன்டை மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் இரட்டை வசிப்பிட சான்று சமர்பித்து சேர்ந்துள்ளதாக கூறி, திருச்சி அரசு மருத்துவ கல்லூரியில் வழங்கப்பட்ட இடத்தை சென்னைக்கு மாற்றக்கோரி மாணவரின் தந்தை ரவி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்த 3-ஆம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சென்னை மருத்துவ கல்லூரிகளில் மட்டும் வெளிமாநிலங்களை சேர்ந்த 104 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், தமிழகம் முழுவதும் 440 மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும் இதனால் மனுதாரர் சென்னையில் படிக்கும் வாய்ப்பு பறி போனதாகவும் வாதிட்டார்.
இந்த வழக்கில் சுகாதாரத்துறை செயலாளரை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதி, இருப்பிடச்சான்றிதழை வழங்கும் தாசில்தார் வருவாய்துறையின் கீழ் வருவதால் வருவாய்த்துறை செயலாளரையும் எதிர்மனுதாரராக சேர்த்தும் உத்தரவிட்டார்.
மேலும், நடப்பு கல்வியாண்டில் தேர்வு பெற்ற மாணவர்களின் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யும்படி மருத்துவ மாணவர் சேர்க்கை தேர்வுக்குழு செயலாளருக்கு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கு திங்கள் கிழமை காலை விசாரணைக்கு வந்தபோது ஆவணங்களை மருத்துவ கல்வி இயக்குனராகம் தாக்கல் செய்யவில்லை. இதனையடுத்து மாலைக்குள் தாக்கல் செய்யவில்லை என்றால் சென்னை போலீஸ் கமிஷனர் அனைத்து ஆவணங்களையும் கைபற்றி தாக்கல் செய்ய உத்தரவிட நேரிடும் என எச்சரித்தார்.
இதனையடுத்து, இந்த ஆண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கை தொடர்பான அனைத்து ஆவணங்களை மருத்துவ கல்வி இயக்குனரகத்தால் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து வழக்கின் விசாரணை நவம்பர் 8-ஆம் தேதிக்கு (புதன் கிழமை) தள்ளிவைத்தார்.