Cyclone-michaung | chennai-flood: வங்கக்கடலில் உருவான 'மிக்ஜாம்' புயல் காரணமாக, வடகடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவற்றில் கடந்த 3 மற்றும் 4-ந் தேதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக சென்னை பெருநகரில் வெள்ளநீர் சூழ்ந்து நகரமே தண்ணீரில் தத்தளித்தது.
மழை விட்டு 5 நாட்கள் ஆகியும், இன்னும் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் முழுமையாக வடிந்த பாடில்லை. தற்போது பெரும்பாலான இடங்களில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ.6,000 நிவாரணம் ரொக்கமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
ரூ.6,000 நிவாரணம் தொடர்பாக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணமாக ரூ. 6 ஆயிரம் வழங்குவதற்கான டோக்கன் வருகிற 16-ம் தேதியில் இருந்து வழங்கப்படும். பத்து நாட்களுக்குள் நிவாரண தொகை முழுவதுமாக வழங்கப்பட்டுவிடும்" என்று கூறினார்.
என்னென்ன ஆதாரங்கள் தேவை?
இந்நிலையில், ரூ.6,000 நிவாரண தொகை யாருக்கெல்லம் வழங்கப்பட உள்ளது மற்றும் நிவாரண தொகையை பெற என்னென்ன ஆதாரங்கள் தேவை என்பது குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, ரூ.6,000 வெள்ள நிவாரண தொகை மூன்று பிரிவுகளாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு நிவாரண தொகை கிடைக்கும். ரேஷன் அட்டை விண்ணப்பித்தவர்களுக்கும் ரூ.6,000 கிடைக்கும்.
சென்னையில் பல ஆண்டுகளாக வசிப்பவர்கள் உரிய ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதாவது வாடகை ஒப்பந்தம், கேஸ் பில் உள்ளிட்ட ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“