நடிகர் கமல்ஹாசன் நேற்று மதுரையில் ’மக்கள் நீதி மய்யம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது அதிமுகவையும் அமைச்சர்களையும் கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து அமைச்சர்களும் பாஜகவினரும் அவரை தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.
கட்சி தொடங்குவதற்கு முன்பாக கமல்ஹாசன் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார். அடுத்த நாள், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ’காகிதப்பூ மணக்காது’ என்று அரசியல் கட்சி தொடங்க உள்ள கமல், ரஜினியை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்தார்.
இதற்கு மதுரையில் பதில் சொன்ன கமல்ஹாசன், ‘நான் பூ அல்ல. என்ன முகர்ந்து பார்க்காதீர்கள். நான் விதை’ என்றார்.
கமல் தன்னை விதை என்று சொன்னதை பற்றி கருத்துச் சொன்ன அமைச்சர் டி.ஜெயக்குமார், ‘திமுகவோடு நாங்கள் ஒருபோதும் ஒத்துப் போவதில்லை. ஆனால் இந்த விஷயத்தில் மு.க.ஸ்டாலின் சொன்னதை ஏற்றுக் கொள்கிறேன். கமல் மரபணு நீக்கப்பட்ட விதை. தமிழகத்தில் அதற்கு இடமில்லை’ என்றார்.
இந்நிலையில் அதிமுகவுக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி.தினகரன், ‘‘அதிமுகவை ஒழிக்க வேண்டும் என்று கமல் சொல்வதை ஏற்க முடியாது. ஜெயலலிதாவின் தியாகத்தால் வளர்ந்த கட்சி அது’’ என்று சொன்னார்.
திராவிட கட்சிகள் அனைத்தும் கமல்ஹாசனை எதிர்ப்பதில் ஒரணியில் இணைந்திருப்பது தமிழக அரசியலை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘‘திமிழகத்தைப் பொறுத்தவரையில் திராவிட கட்சிகள் தங்களுக்குள் 50 ஆண்டுகளாக ஆட்சிகளை மாற்றிக் கொண்டுள்ளனவே தவிர, புதிதாக வரும் எந்த கட்சிக்கும் இடம் கொடுத்ததில்லை. அது தேசிய கட்சியாக இருக்கலாம். அல்லது தேமுதிக, பாமக, நாம் தமிழர் என எந்த கட்சிகள் வந்தாலும், அவர்களை மாற்றமாக பார்க்கக் கூட அனுமதிப்பதில்லை.
விஜயகாந்த் தேமுதிகவை ஆரம்பித்த போது, ‘தி.மு.க., அதிமுகவுடன் கூட்டணி இல்லை’’ என்றார். ஆனால் இரண்டாவது சட்டமன்ற தேர்தலிலேயே அவர் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, அதிமுக வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். அதன் மூலம் அவர் மீது இருந்த எதிர்பார்ப்பை மங்க செய்துவிட்டார்கள்.
இப்போது கமல் அதிமுகவை மட்டும் விமர்சித்தாலும், திமுகவும் அதிமுகவும் அவர் வருவதை விரும்பவில்லை என்பதை சமீபகாலமான நிகழ்வுகள் காட்டுகின்றன’’ என்கிறார் மூத்த அரசியல் விமர்சகர் ஒருவர்.
காவிரி பிரச்னையில் எதிர்கட்சியான திமுக, ’அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டப்போவதாக அறிவித்தது. அரசே அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினால் எங்கள் கூட்டத்தை ரத்து செய்துவிடுவோம்’ என்று ஸ்டாலின் சொன்னார். அதே போல அரசு அனைத்து கட்சி கூட்டத்தை அறிவித்ததும், திமுக கலந்து கொள்வதாக அறிவித்ததோடு, திமுக கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தை ரத்து செய்தார்.
காவிரி தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசை இதற்கான காரணமாக காட்ட முன் வரலாம்.
பஸ் கட்டண உயர்வின் போதும், திமுக சில பரிந்துரைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கொடுத்தன. அவரும் வாங்கிக் கொண்டார்.
திமுகவைச் சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர், ‘‘நாகரிகமான அரசியலை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதில் முக.ஸாடாலின் தெளிவாக இருக்கிறார். சிறந்த எதிர்கட்சியாக தலைவராகவும் இருந்தார். எங்களுக்கும் அதிமுகவுக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. இருந்தாலும் எதிரி கட்சியாக செயல்பட நாங்கள் விரும்பவில்லை’’ என்றார்.
திராவிட கட்சிக்குள் போட்டியிருக்கலாமே தவிர, வேறு ஒருவரை உள்ளே விடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.