சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்ய தங்களுக்கு அதிகாரம் இல்லை என இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்திய இறையாண்மைக்கும், ஒருமைபாட்டுக்கும் எதிராகவும் சாதி ரீதியாக வெறுப்புணர்வை தூண்டும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்ய வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட மக்கள் பிரநிதிகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் எனவும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சென்னையை சேர்ந்த ஜோசப் என்பவர் கடந்த மே மாதம் மனு அளித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்ற உத்தரவின் படி கட்சிகளின் பதிவை ரத்து செய்ய தங்களுக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்திருந்தது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை எதிர்த்து ஜோசப் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், அரசியல் கட்சிகளை பதிவு செய்ய அதிகாரம் கொண்ட இந்திய தேர்தல் ஆணையத்திற்கு, கட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் உள்ளதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என கோரியிருந்தார்.
மேலும், அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்ய தங்களுக்கு அதிகாரம் இல்லை என தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் தனது மனுவில் அவர் தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.