18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில், சபாநாயகரின் நடவடிக்கை சரியே என தீர்ப்பளித்து அ.ம.மு.க. வட்டாரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. இத்தீர்ப்பை எதிர்த்து முதலில் மேல்முறையீடு செய்யப் போவதாக கூறிய டி.டி.வி. தரப்பு, ஒரு 'ஜம்ப்' அடித்து, இடைத்தேர்தலைச் சந்திப்பதாக கூறத் தொடங்கியிருக்கின்றனர்.
18 தொகுதிகளும் காலியானதாக தமிழக அரசு ஏற்கனவே அரசாணை வெளியிட்டிருந்தது. உயர்நீதிமன்றத்தில் தகுதி நீக்க வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தால், தொகுதிகள் காலியானதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்க முடியவில்லை. தற்போது உயர்நீதிமன்றமும் தீர்ப்பளித்து, அந்த 18 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று கூறியிருப்பதால், தீர்ப்பு வெளிவந்த ஆறு மாதத்திற்குள் இடைத்தேர்தலை நடத்தியாக வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்திற்கு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே ஏற்கனவே காலியாக உள்ள திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தலை டிசம்பர் மாதத்திற்கு மேல் தள்ளிப்போட முடியாது என தேர்தல் ஆணையம் கருதுகிறது. இந்த 20 தொகுதிகளிலும் டி.டி.வி. கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் என்னென்ன சிக்கலை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும் என சட்ட வல்லுநர்களிடம் பேசினோம்.
சிக்கல் 1: அ.ம.மு.க. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியல்ல. உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தலை சந்திக்க, டி.டி.வி. அணிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் செய்து கொடுத்தது ஒரு இடைக்கால ஏற்பாடு தான். இதனால், டி.டி.வி. நிறுத்தும் வேட்பாளர்கள் சுயேட்சைகளாகத் தான் போட்டியிட வேண்டியதிருக்கும். ஒருவேளை அ.ம.மு.க.வை தனிக்கட்சியாக பதிவு செய்தால், டெல்லி உயர் நீதிமன்றத்தில் இரட்டை இலை சின்னத்தை மதுசூதனனுக்கு அளித்துள்ளதை எதிர்த்து டி.டி.வி. தொடுத்துள்ள வழக்கிலிருந்து விடுபட வேண்டியதிருக்கும். அ.ம.மு.க.வா? இரட்டை இலையா? என்கிற குழப்பம் டி.டி.வி.க்கு ஏற்பட்டுள்ளது.
சிக்கல் 2: ஏப்ரல் 2017ம் ஆண்டு ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெற்ற போது அ.தி.மு.க. அம்மா அணியைச் சேர்ந்த டி.டி.வி. தினகரனுக்கு தொப்பி சின்னமும், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியைச் சேர்ந்த மதுசூதனனுக்கு இரட்டை மின்கம்பம் சின்னமும் அளிக்கப்பட்டது. இத்தேர்தல் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் டிசம்பரில் தேர்தல் நடைபெற்ற போது, அணிகள் இணைந்து மதுசூதனனுக்கு இரட்டை இலை கிடைத்தது.
பிரிந்து சென்ற டி.டி.வி. தினகரன் மீண்டும் தொப்பி சின்னத்திற்காக விண்ணப்பித்தார். ஆனால், அவரோடு சேர்த்து 29 பேர் தொப்பிக்காக போட்டியிட்டனர். இறுதியில், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியான நமது கொங்கு முன்னேற்றக் கழக வேட்பாளர் ரமேஷ்க்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதே போன்றதொரு நிலைமை குக்கருக்கும் வரலாம்.
டி.டி.வி. வேட்பாளர்களால் பொது சின்னத்தை கோர முடியாது. ஆக மொத்தம் வீதிக்கு வீதி வரையப்பட்டுள்ள குக்கர் அவுட்!
சிக்கல் 3: தகுதிநீக்கம் செய்யப்பட்ட இந்த 18 பேரின் கட்சிப் பதவிகள் மட்டும் தான் பறிக்கப்பட்டுள்ளதே தவிர, இவர்கள் யாரும் அ.தி.மு.க.வை விட்டு நீக்கப்படவில்லை. நாளையே புது உறுப்பினர் அட்டைக்கு விண்ணப்பித்தால் கட்டாயம் வழங்கியாக வேண்டும். அதற்கு முதலில் அவர்கள் ஓ.பி.எஸ்., இ.பி.எஸை ஏற்றுக் கொண்டு அ.தி.மு.க.விற்குள் வர வேண்டும். ஒருவேளை இவர்களுக்கே மீண்டும் டி.டி.வி. வாய்ப்பளித்து தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து களமிறங்கினால், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும். அ.தி.மு.க.விற்குள் பிறகு சேர்ந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணமிருந்தாலும், முடியாமல் போய்விடும்.
பொது சின்னம் பெறும் விவகாரத்தில், சீமானின் 'நாம் தமிழர் கட்சி' இரட்டை மெழுகுவர்த்தியை பெற்றது போல, தங்களாலும் 'குக்கர்' சின்னத்தை பெற முடியுமென அ.ம.மு.க. நிர்வாகிகள் கூறுகின்றனர். ஒரு சட்டமன்றத் தேர்தலில் 10 சதவிகித இடங்களில் ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சி போட்டியிடும் போது, பொது சின்னம் கோரலாம் என தேர்தல் ஆணையத்தின் விதி கூறுகிறது.
இதன்படி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியான 'நாம் தமிழர் கட்சி', 2016 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தன் வேட்பாளர்களை நிறுத்துவதை மேற்கோள் காட்டித் தான் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தை பெற்றது. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படாத கட்சியான அ.ம.மு.க.வால் எப்படி குக்கர் சின்னத்தை பெற முடியும்? அதுவும் இடைத்தேர்தலுக்கான சின்னம் விதியே தேர்தல் ஆணையத்தில் இல்லாத போது, எப்படி பொது சின்னத்தை கோர முடியும்?
சிக்கலுக்கு மேல் சிக்கலை சந்தித்து கொண்டிருக்கிறது டி.டி.வி. தரப்பு. எனினும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு பிறகு நடைபெறுவதாக இருந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஸ்பெஷலாக விண்ணப்பித்து குக்கர் சின்னத்தை பெற்றது அமமுக. பிறகு தேர்தலே நடைபெறவில்லை என்பது தனிக்கதை! இந்த முறையும் அதே போன்ற முயற்சியை டிடிவி தினகரன் மேற்கொள்வார் என எதிர்பார்க்கலாம். வெற்றி கிடைக்குமா? என்பதுதான் தெரியவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.