நாய்க்கறி அல்ல அது... புதைத்துவிட்டோம்: நீதிமன்றத்தில் அதிகாரிகள் தகவல்

Dog Meat Rumours: சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கொடுங்கையூர் குப்பை பகுதியில் புதைத்ததாகவும் தெரிவித்தார்.

சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி புதைக்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி மற்றும் உணவு பாதுகாப்பு துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளன.

கடந்த 17 ஆம் தேதி ஜோத்பூரிலிருந்து சென்னை எழும்பூர் வந்த ரயிலில் 2,100 கிலோ இறைச்சியை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த இறைச்சி குறித்த ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட கோரி இந்திய கால்நடைகளுக்கான மக்கள் அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி குறித்த ஆய்வறிக்கையை உணவுத் துறை அதிகாரிகள் வெளியிடாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், ரயில்வே காவல்துறை பதிவு செய்த வழக்கில் விலங்குகள் கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட முக்கிய சட்டப்பிரிவுகள் சேர்க்கப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும். வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு இறைச்சியை கொண்டு வருவதற்கான விதிகளை வகுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது உணவு பாதுகாப்பு துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சிகள் ஆய்வுக்கு கால்நடை மருத்துவ பல்கலை கழகத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் அது ஆட்டு இறைச்சி என்று முதல் கட்ட தெரியவந்ததாகவும் இருந்தபோதிலும் அது பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி உணவு பாதுகாப்பு விதிகளின் படி பதப்படுத்தப்பட்டவில்லை. சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் அதை மாநகராட்சி அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டதாகவும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கொடுங்கையூர் குப்பை பகுதியில் புதைத்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் எந்த விதியின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி அழிக்கப்பட்டது என்பது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இந்த வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையரையும் எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணை அடுத்த மாதம் 6 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close