"குற்றவாளியை என் அப்பா என சொல்லாதீர்கள்”, என கௌசல்யா தெரிவித்துள்ளார். மேலும், தன்னை எந்த இயக்கமும் இயக்கவில்லை என கூறியுள்ளார்.
உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில், குற்றவாளிகளான கௌசல்யாவின் தந்தை சின்னசாமி, கூலிப்படையை சேர்ந்த மணிகண்டன், ஜெகதீசன், செல்வகுமார், கலை தமிழ்வாணன், மதன் ஆகியோருக்கு இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், மற்ற 2 குற்றவாளிகளான ஸ்டீபன் தன்ராஜூக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், அடைக்கலம் தந்த மணிகண்டனுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், உடுமலைப்பேட்டையில் கௌசல்யா செய்தியாளர்களை சந்தித்தார். சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிரும் உடனிருந்தார்.
அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கௌசல்யா பதிலளித்தார். “விடுதலையான 3 பேருக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என கௌசல்யா கூறினார்.
சமூக வலைத்தளங்களில் கௌசல்யாவுக்கு எதிராக ஆபாசமாக கருத்துகள் பரப்பப்படுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “என் இடத்திலிருந்து பார்க்க வேண்டும். எல்லோரும் மனநோயாளிகள் போன்றுதான் செயல்படுகின்றனர். சங்கரின் தம்பிகளுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து இப்படி கருத்து தெரிவித்தால் அவர்களின் மனநிலைமை எப்படி இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. நான் உயிருடன் இருக்கும் வரை சாதி ஒழிப்புக்கான போராட்டம் தொடரும்.”, என தெரிவித்தார்.
அப்போது, பத்திரிக்கையாளர் குற்றவாளி சின்னசாமியை கௌசல்யாவின் தந்தை என குறிப்பிட்டதற்கு “அவர் என் அப்பாவே இல்லை. குற்றவாளியை என் அப்பா என சொல்லாதீர்கள். அவரின் மகளாக நான் என்னை நினைக்கவில்லை”, என கூறினார்.
மேலும், சாதி ஆணவ கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும், சங்கர் தனிப்பயிற்சி மையம் மூலம் சாதி கொடுமைகள் குறித்து குழந்தைகள் மனதில் கருத்துகளை பதியவேண்டும் என்பதே தனது கடமை எனவும் கூறினார்.
உடனிருந்த எவிடென்ஸ் கதிர், கௌசல்யாவுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் ஆபாசமான கருத்துகள் பரப்பும் சாதிய அமைப்புகளுக்கு எதிராக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.