8 வகுப்புக்கான அறிவியல் சமச்சீர் பாட புத்தகத்தில், பெண்களுக்கு அறிவுறுத்தும்படி குறிப்பிட்டுள்ள சில வரிகள் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருமளவில் அதிகரித்து வருகின்றன. கத்துவா , உன்னாவ் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் அதை உறுதி செய்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், தமிழக அரசின் 8 வகுப்பு சமச்சீர் பாடத்திட்டத்தில் பெண்களுக்கு கூறப்பட்டுள்ள கருத்துக்கள் மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
அறிவியல் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள வரிகள், “ யாரும் உங்களுக்கு முத்தம் கொடுக்கவோ, கட்டிப்பிடிக்கவோ அனுமதிக்க வேண்டாம். உணர்ச்சிகளைத் தூண்டும் வகையிலான ஆடைகளை அணிய வேண்டாம். பள்ளிக்கு பஸ்ஸில், ஆட்டோவில், ரயிலில் செல்லும்போது உங்களுக்கு அருகில் இருக்கும் மாற்று பாலியல் இனத்தவரிடம் இருந்து தள்ளியே இருங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கருத்துக்கள் தற்போது இரண்டு வகையான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுக் குறித்து விளக்கம் அளித்துள்ள, பள்ளிக் கல்வித்துறை தலைமை செயலாளர் பிரதீப் யாதவ் “ இந்தப் பாடக் குறிப்பு வெளிவந்திருக்கும் தகவல் குறித்து எனக்கு தெரியாது. விரைவில் இதுக் குறித்து அறிக்கை வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
அதே போல், தமிழக கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இயக்குநர் ஜி. அறிவொளி, ”கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பாடப் புத்தகம் அச்சிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடங்கள் அனைத்தும் மீண்டும் மறுசீராய்வுக்கு அனுப்பபடும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாடபுத்தகத்தில் இடம்பெற்றுள்ள, வரிகள் பாலியல் பலாத்காரத்திற்கு பாதிக்கப்படுவர்கள் தான் தூண்டுதலுக்கும் காரணமாகிறார்கள் என்கிற அர்த்தத்தில் பாடம் இடம் பெற்றுள்ளது என்றும், சரியாக உட்காரு, ஒழுங்கான உடையை உடுத்திக் கொள் இல்லையென்றால் நீ பாலியல் பலாத்காரம் செய்யப்படுவாய் என்ற கருத்தை ஆழமாக திணிப்பது போல் இருப்பதாகவும் சில மகளிர் அமைப்புகள் மற்றும் தன்னார்வ் தொண்டர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.