நீலகிரியில் தி.மு.க. மாணவரனி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் தி.மு.க-வின் துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தி.மு.க-வினர் கரை வேட்டி கட்டினால் பொட்டு வைக்க வேண்டாம் என்றார்.
கடவுள் தேவைப்படுவோர் வைத்து கொள்ளலாம். சாமி கும்பிடவேண்டாம் என்று சொல்லவில்லை. அன்புதான் கடவுள் என்று சொன்னாலும் கூட மனிதர்களுக்கு மனிதர் காட்டுகிற இரக்கம்தான் கடவுள் என்று சொன்னாலும், கள்ளமில்லா உள்ளம் அதுதான் கடவுளின் இல்லம் என்று சொன்னாலும், அண்ணா சொன்னதுபோல் ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்று சொன்னாலும் அப்படிப்பட்ட கடவுள் மீது நமக்கு ஒன்றும் கோபம் இல்லை. வைத்து கொள்ளுங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை.
ஆனால் நீங்களும் பொட்டு வைத்து, சங்கியும் பொட்டு வைக்கும்போது, நீங்களும் கையில் கயிறு கட்டி, சங்கியும் கையில் கயிறு கட்டும்போது எவன் சங்கி எவன் திமுககாரன் என்று வித்தியாசம் தெரியாது. இதனால்தான் சொல்கிறேன். சாமி கும்பிடுங்கள். உங்களின் தாயார், அப்பா விபூதி தந்தால் வைத்து கொள்ளுங்கள். தி.மு.க. கரை வேட்டி கட்டும்போது பொட்டு வைக்காதீங்கள். இவ்வாறு அவர் பேசினார்.