எனக்கு பாடம் நடத்த வேண்டாம் : தமிழ் தேசியவாதிகளை எச்சரித்த கே.எஸ்.ஆர்.

தமிழ் தேசியவாதியான வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தமிழ் தேசியவாதிகளுக்கு எதிராக வெடித்து குமுறியிருக்கிறார்.

தமிழ் தேசிய அரசியலின் மூத்த முன்னோடிகளில் ஒருவர் கே.எஸ்.ஆர். என அழைக்கப்படும் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். அவரே அண்மையில் தமிழ் தேசியவாதிகளுக்கு எதிராக வெடித்து குமுறியிருப்பதுதான் பரபரப்பு!

தி.மு.க.வின் இப்போதைய செய்தி தொடர்பு செயலாளர்களில் ஒருவரான கே.எஸ்.ஆர்., ஆரம்பநாட்களில் பழ.நெடுமாறனின் இயக்கத்தில் பொறுப்பில் இருந்தவர். விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் சென்னையில் இருந்த காலங்களில் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை பெற்றவர். பிரபாகரனின் வழக்கறிஞராகவும், அதிகாரபூர்வமற்ற முறையில் புலிகளின் செய்தி தொடர்பாளராகவும் இயங்கியவர். தீவிர இன, மொழி உணர்வாளரான அவருக்கு, இப்போதைய தமிழ் தேசிய அமைப்புகள் சிலவற்றின் மீது ஏக ஆதங்கம்! குறிப்பாக குறிப்பிட்ட சில சமூகத்தினரை, ‘வந்தேறிகள்’ என விமர்சிக்கும் நாம் தமிழர் பிரமுகர்களை அவ்வப்போது தனது சமூக வலைதளப் பதிவுகளில் வறுத்து எடுக்கிறார். இந்தப் பனிப்போர், இப்போது இந்தியா – சீனா இடையே உருவாகியிருக்கும் எல்லைப் பிரச்னையிலும் தொடர்கிறது.

ஜூலை 5-ம் தேதி கே.எஸ்.ஆரின் சமூக வலைதளத்தில், இந்தியாவுக்கு எதிரான வாசகங்களுடன் கூடிய பதிவுகளை ஓரிரு தமிழ் தேசிய பிரமுகர்கள் ‘டேக்’ செய்திருந்தார்களாம். அவர்களுக்கு கே.எஸ். ஆர். விடுத்திருக்கும் எச்சரிக்கை செம ஹாட்! ‘இந்தியா சீனா எல்லையில் பதட்டம் நிலவும் வேளையில், ” இந்தியா போரில் தோற்கட்டும்” என்ற பதிவுகள் கண்களில் படுகின்றன. இப்படியான பதிவர்கள் ஆபத்தானவர்கள். உள்நாட்டில் ஆயிரம் அரசியல் இருக்கலாம்.திராவிடம், தேசியம் என்ற மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். அதற்காக அந்நிய நாட்டவரிடம் நாம் தோற்க வேண்டும், என்பதெல்லாம்  ஆபத்தான சிந்தனைகள். அருவருப்பான பேச்சுகள். மரத்தின் உச்சியில் அமர்ந்து அடிமரத்தை வெட்டுவது போன்றது. குறிப்பாக என்னை டேக் செய்து பதிவிடுவதை வன்மையாக கண்டிக்கின்றேன். யாருக்கு யார் பாடம் நடத்துவது. இந்திய அரசியலை கடந்து உலக அரசியலை வாசித்தவன். கண்டவர்கள் எல்லாம் எனக்கு தமிழ் தேசியத்தையும் இந்திய தேசத்தையும் பற்றி கருத்து சொல்ல வேண்டாம். மரியாதைக் கருதி இப்பதிவில் கண்டனத்தை தெரிவிப்பதோடு நிறுத்திக் கொள்கின்றேன்.’ என காட்டமாக கருத்து வெளியிட்டிருக்கிறார் கே.எஸ். ஆர்.
நாம் தமிழர் இயக்கத்தையோ சீமானையோ வெளிப்படையாக குறிப்பிட்டு கே.எஸ்.ஆர். பேசவில்லை என்றாலும், சீமான் தரப்பு மீதான கே.எஸ். ஆரின் விமர்சனமாகவே இது விவாதிக்கப்படுகிறது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close