சென்னையின் அழகிய சாலைகளில் மீண்டும் ஒருமுறை இரட்டை அடுக்கு பேருந்துகள் வலம் வர இருக்கின்றன. கடந்த 18 ஆண்டுகளாக சென்னை மக்கள் அதிகம் எதிர்பார்த்த இந்த ‘டபுள் டெக்கர் பஸ்’ என்கிற இரட்டை அடுக்கு பேருந்துகள், தற்போது மின்சார இரட்டை அடுக்கு பேருந்துகளாக புதுப்பொலிவுடன் வர உள்ளன.
சென்னையில் 1970-களில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட இரட்டை அடுக்கு பஸ்கள், சுமார் 10 ஆண்டுகள் சென்னையின் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்பட்டன. அதன் பிறகு, 1980-களில் நிறுத்தப்பட்டன. பின்னர் 1997-ல் மீண்டும் தொடங்கப்பட்டு, 2008-ல் உயர் நீதிமன்றம் - தாம்பரம் வழித்தடத்தில் கடைசியாக இயக்கப்பட்டது. அதன் பிறகு, இந்த பஸ்களின் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
தற்போது, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், இந்த ஆண்டு இறுதிக்குள் மீண்டும் இரட்டை அடுக்கு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, 20 மின்சார இரட்டை அடுக்கு பஸ்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய பஸ்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், வழக்கமான பஸ்களை விட 1.5 மடங்கு அதிக பயணிகளை, அதாவது சுமார் 90 பேரை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டதாகவும் இருக்கும்.
இந்த பஸ்கள் வார நாட்களில் அதிக நெரிசல் உள்ள வழித்தடங்களில் இயக்கப்படும். அதே நேரத்தில், வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் சென்னை நகரச் சுற்றுலாவுக்கு பயன்படுத்தப்படும். குறிப்பாக, சுற்றுலா செல்வதற்காக பயணிகள் முன்கூட்டியே பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்படும்.
இந்த பஸ்கள் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் இயக்கப்பட இருந்தாலும், பயண வழித்தடங்களும், கட்டணங்களும் தமிழக அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னைவாசிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த இரட்டை அடுக்கு மின்சார பஸ்கள், நிச்சயம் மாநகரப் பயண அனுபவத்தை மேலும் சுவாரஸ்யமாக மாற்றும் என்பதில் சந்தேகமில்லை.