திருச்சியில் இரட்டை கொலை செய்த போதைக்கு குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி திருச்சி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது. இது குறித்த விவரம் வருமாறு:
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த புள்ளம்பாடி ஒன்றியம் வெங்கடாசலபுரம் ஊராட்சியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது சித்தப்பா பழனிச்சாமி குடும்பத்துடன் வெங்கடாஜலபுரத்தில் வசித்து வருவதாகவும், அவருக்கு தனபாப்பு என்ற மனைவியும், சத்தியமூர்த்தி என்ற மகனும் இருப்பதாகவும், அதே ஊரில் வசிக்கும் தனபாப்புவின் அண்ணன் ராமசாமி பஞ்சாயத்து தலைவராக இருக்கும்போது தேர்தல் செலவுக்காக ரூ.1 லட்சம் தனபாப்பு வெளியில் கடன் வாங்கி கொடுத்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மேற்படி ராமசாமி இறந்து விடவே அவரது மகன் ராஜகோபால் என்பவர் தனபாப்பு மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோரிடம் பணம் கேட்கும்போது இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
கடந்த 2017-ம் வருடம் மே மாதம் 24-ம் தேதி அதிகாலையில் சம்பவத்தன்று ராஜகோபால் என்பவர் சத்தியமூர்த்தி வீட்டிற்கு சென்று அப்போது கையில் வைத்திருந்த கனமான ஆயுதத்தால் தனபாப்பு மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோரின் தலையில் அடித்து கொலை செய்து, பின்னர் அவர்களை வீட்டு வாசலில் மண் ரோட்டில் போட்டு விட்டு தனது புளு கலர் டிராக்டரை அவர்கள் மீது ஏற்றி விபத்தில் இறந்ததாக ஜோடனை செய்து விட்டு ஓடிவிட்டதாக அப்பகுதியைச் சேர்ந்த மூக்கன் என்பவரின் மகன் செல்வகுமார் என்பவர் லால்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில், லால்குடி இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் நேரில் சென்று பிரேதத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்தனர்.
இது தொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று நீதிபதி செல்வமுத்துக்குமாரி குற்றவாளி ராஜகோபாலுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 13 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சக்திவேல் ஆஜராகி வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற இரட்டைக்கொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“