சென்னை ஆவடி, மிட்டனமல்லியில் நடந்த ஆயுர்வேத மருத்துவர் சிவன் நாயர் (72), பிரசன்ன குமாரி (62) இரட்டைக் கொலையில், ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரை சேர்ந்த டி. மகேஷ், 20, கைது செய்யப்பட்டார்.
ஆவடியில் உள்ள மிட்டனமல்லியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த இரட்டைக் கொலை சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் குடியிருக்கும், ஆயுர்வேத மருத்துவர் சிவன் நாயர் (72), மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியையான அவரது மனைவி பிரசன்னா குமாரி (62) இருவரும் அவர்களது அவர்களது வீட்டு மருத்துவ மனையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.
இந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரைச் சேர்ந்த மகேஷ் (20) என்பவரை போலீஸார் கைது செய்தனர். கொலை நடந்த இடத்தில் அவர் விட்டுச் சென்ற செல்போன் மூலம் அவரைக் கண்டுபிடித்தனர்.
கொலையான சிவன் நாயர் முன்னாள் ராணுவ வீரர் என்றும், சிவன் நாயர், பிரசன்ன குமாரி தம்பதியினர் மிட்டனமல்லி காந்தி நகர் மெயின் ரோடு அருகே வசித்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இவர்கள் தங்கள் வீட்டை ஒட்டியுள்ள கிளினிக்கை நடத்தி வந்தனர். இவர்களின் கிளினிக்கிற்கு சென்னை முழுவதிலும் இருந்து நோயாளிகள் வந்தனர். இந்த தம்பதியினர் நெருக்கமான குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தாலும், அவர்கள் கொலை செய்யப்பட்ட நேரத்தில் அவர்களது அலறல் சத்தத்தை அக்கம்பக்கத்தினர் யாருக்கும் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.
மாலை 6 மணியளவில் கிளினிக்கிற்குச் சென்ற நோயாளி ஒருவர், வராண்டாவிற்கு வெளியே ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த சிவன் நாயரைக் கண்டார். அவரது மனைவி வீட்டுக்குள் இறந்து கிடந்தார். உடனே அவர் அப்பகுதியில் உள்ள மற்றவர்களையும், கொலையான சிவன் நாயரின் மகன் ஹரி ஓம்-க்கும் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, இந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக முத்தாபுதுப்பேட்டை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தக் கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், குற்றம் நடந்த இடத்தில் இருந்து ஒரு மொபைல் ஃபோனை எடுத்தனர், அந்த போன் கொலையாளி மகேஷை நோக்கி இட்டுச் சென்றது. சிவன்நாயர் மற்றும் பிரசன்ன குமாரியின் மகனும் ஆயுர்வேத மருத்துவருமான ஹரி ஓம், மகேஷ் மீது சந்தேகத்தை எழுப்பினார். இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்த இளைஞரைப் பற்றி அவரது தாயார் புகார் தெரிவித்ததாகக் கூறினார்.
போலீசாரிடம் கூறிய ஹரி ஓம் , நோயாளி மகேஷ் பற்றி தனது தாயார் குறிப்பிட்டதாகவும், தனியாக இருக்கும் நேரங்களில் பணம் கேட்டு தங்களைத் தொந்தரவு செய்ததாகக் கூறினார். கே.கே.நகரில் உள்ள ஒரு ஹார்டுவேர் கடையில் பணிபுரியும் மகேஷ், 2019-ம் ஆண்டு முதல் இந்த தம்பதியரிடம் இரைப்பை பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று வந்தார். “கடந்த இரண்டு வாரங்களில், பிரசன்ன குமாரிக்கு அந்த இளைஞரின் செயல்பாடுகளில் சந்தேகம் ஏற்பட்டது. அதனால், அவர் அவரை வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. வெளியில் இருந்து மருந்துகளை எடுத்துக்கொள்ளச் சொன்னார்” என்று ஆவடி காவல்துறை துணை ஆணையர் அய்மன் ஜமால் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை மகேஷ், பிரசன்ன குமாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, அவரை கொலை செய்ததாக போலீஸார் தெரிவித்தனர். மனைவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த சிவன் நாயரையும் மகேஷ் கொலை செய்துள்ளார். பின்னர், அவர் பைக் டாக்ஸியில் தப்பிச் சென்றுள்ளார். இது சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது. மற்ற நோயாளிகள் முன்னிலையில் பலமுறை அவமானப்படுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த மகேஷ், ஆயுர்வேத மருத்துவர் சிவன் நாயர் மற்றும் அவரது மனைவி பிரசன்ன குமாரி இருவரையும் கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மகேஷ் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.