தமிழக அரசின் வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்க வேண்டும். இல்லையென்றால்,இதற்காக நாங்கள் எந்த எல்லைக்கும் நாங்கள் போவோம் என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசு நடத்தக் கோரி பா.ம.க, த.மா.கா, ஐ.ஜே.கே உள்ளிட்ட
சமூக நீதிக் கூட்டமைப்பினர் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் பேசிய பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், “தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள். தமிழ்நாட்டினுடைய பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற மார்ச் மாதம் 14-ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த கூட்டத்தொடரில் தமிழக அரசு தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என்று அறிவிக்க வேண்டும். அறிவித்து, அதை ஒரு மாதத்தில் நிறைவேற்ற வேண்டும். இது அவசியமானது, அவசரமானது. அப்படி இந்த கூட்டத் தொடரில் அறிவிக்கவில்லை என்றால், அதன் பிறகு நாங்கள், எங்களுடைய கூட்டமைப்பு கூடி தமிழ்நாடு முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்துவோம். ஏதோ ஒரு போராட்டம் கிடையாது, தமிழ்நாடு முழுவதும் அந்தந்த பகுதிகளில் போராட்டம் நடக்கும். சொன்னால் போதும், இது ஏதோ ஒரு சின்ன அறிவிப்பு எல்லாம் கிடையாது. இது சமூக நீதி போராட்டம். இதற்காக நாங்கள் எந்த எல்லைக்கும் நாங்கள் போவோம். அதனால், உடனடியாக இதை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
ஏனென்றால், தமிழ்நாட்டில் தி.மு.க-வைத் தவிர மற்ற அத்தனை கட்சிகளும் தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தலாம் என்று அறிக்கை விட்டு இருக்கிறார்கள். கோரிக்கை விட்டு இருக்கிறார்கள். தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்றெல்லாம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதனால், இதில் இன்னும் நாங்கள் பொறுமையாக இருக்க மாட்டோம். இது எங்களுடைய உரிமை பிரச்னை. இந்த கணக்கெடுப்பு நடத்தினால் தான் தமிழக மக்கள் முன்னேறுவார்கள். தமிழகமும் முன்னேறும்” என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
சென்னை, வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில், பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே,மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜி.செந்தமிழன், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் இரவி பச்சமுத்து, புதிய நீதிக் கட்சியின் பொதுச்செயலாளர் டாக்டர் கோ.சமரசம், தென்னிந்திய பார்வர்டு தலைவர் திருமாறன்.ஜி, கொங்கு மக்கள் முன்னணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் கவுண்டர், தமிழர் தேசம் கட்சித் தலைவர் கே.கே.எஸ் செல்வக்குமார், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக இணைப் பொதுச்செயலாளர் தமிழரசன், தமிழ்நாடு யாதவ மகாசபை செயலாளர் வழக்கறிஞர் சேது மாதவன், வெள்ளாளர் முன்னேற்றக்கழகத் தலைவர் அண்ணா சரவணம், தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவர் முத்து இரமேஷ் , வழக்கறிஞர் சமூகநீதிப் பேரவைத் தலைவர் வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.