கூகுள் டூடுலில் அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவர் ஜி.வெங்கடசாமி
கூகுள் டூடுலில் அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவர் ஜி.வெங்கடசாமி : கண்களில் ஏதாவது பிரச்சனை என்றால் நமக்கு அளிக்கப்படும் முதல் பரிந்துரையே அரவிந்த கண் மருத்துவமனைக்கு போ என்பது தான். கண் மருத்துவம் தொடர்பான பல்வேறு சிகிச்சைகளை அனைவருக்கும் ஏற்ற வகையில் அளித்து வரும் அரவிந்த் மருத்துவமனையை தோற்றுவித்த கோவிந்தப்பா வெங்கடசாமி என்று அழைக்கப்படும் ஜி. வெங்கடசாமி அவர்களின் 100வது பிறந்த நாள் இன்று.
Advertisment
கூகுள் டூடுலில் அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவர் ஜி.வெங்கடசாமி
பிறப்பு மற்றும் படிப்பு
1918ம் ஆண்டு அன்றைய திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த எட்டயபுரத்தில் பிறந்தவர் ஜி. வெங்கடசாமி. ஆறாம் வகுப்பு வரை எட்டயபுரத்தில் படித்துவிட்டு மேற்படிப்பிற்காக கோவில்பட்டி சென்றார். அங்கு உயர் நிலைக் கல்வியை கற்றார். அதன் பின்னர் மதுரையில் இருக்கும் அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை வேதியியல் பிரிவில் பட்டம் பெற்றார். பின்னர் சென்னையில் இருக்கும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றார்.
Advertisment
Advertisements
ராணுவ மருத்துவராக கோவிந்தப்பா வெங்கடசாமி
ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலத்தில் அரசு ராணுவ மருத்துவராக பல்வேறு இடங்களில் மருத்துவப் பணி ஆற்றினார். மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். மியான்மரில் தங்கியிருந்த காலங்களில் விசப்பூச்சி ஒன்று கடித்த காரணத்தால் முடக்கு வாதம் ஏற்பட்டது.
ராணுவ பணிகளில் இருந்து விடுப்பு வாங்கிக் கொண்டு வந்த அவர் மகப்பேறு மருத்துவம் பயின்றார். பின்னர் சென்னை எழும்பூரில் மகப்பேறு மருத்துவராக பயிற்சி பெற்றார். ஆனால் மீண்டும் முடக்குவாதம் ஏற்பட தன்னுடைய நாட்களை நோய்களில் கழித்தார்.
கண் மருத்துவரான ஜி. வெங்கடசாமி
மகப்பேறு மருத்துவம் செய்ய முடியாத நிலைக்கு அவர்களின் கைகள் ஆளாகின. நண்பரின் ஆலோசனையால் கண் மருத்துவம் படித்தார். 1951ல் சென்னை கண் மருத்துவமனையில் கண் மருத்துவப் பட்டம் பெற்றார். அன்றைய சூழலில் ஐந்தே ஐந்து கண் மருத்துவர்கள் மட்டுமே இருந்திருக்கிறார்கள். அதில் இவரும் ஒருவர். பின்னர், 1956ம் ஆண்டு மதுரை அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்ட கண் மருத்துவ பிரிவிற்கு தலைமை மருத்துவராக பணியாற்றினார்.
1976ல் ஓய்வு பெற்ற வெங்கடசாமி மதுரையில் 11 படுக்கை வசதிகளுடன் கூடிய அரவிந்த மருத்துவமனையை நிறுவினார். ஏழைகளுக்கு உதவும் நோக்கில் இலவச சிகிச்சை அளித்தார். தமிழகத்தின் மிகப்பெரிய கண் மருத்துவமனை குழு இவரால் உருவாக்கப்பட்டது. அவருடைய வாழ்நாளில் சுமார் 1,00,000 கண் அறுவை சிகிச்சைகள் செய்திருப்பார்.
ஜி. வெங்கடசாமிக்கு அளிக்கப்பட்ட கௌரவ விருதுகள்
இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம ஸ்ரீ விருது இவருக்கு 1973ல் தரப்பட்டது. 1985ல் இலினாய் பல்கலைக் கழகம் கௌரவ டாக்டர் பட்டம் தந்து சிறப்பித்தது. 1987ல் சர்வதேச ஹெலன் கெல்லர் விருது வழங்கப்பட்டது.
2006ம் ஆண்டு, ஜூலை 7 அன்று மதுரையில் தன்னுடைய இன்னுயிரை நீத்தார் டாக்டர் ஜி.வெங்கடசாமி எனும் கோவிந்தப்பா வெங்கடசாமி.
கூகுள் டூடுல் சிறப்பு
அவரின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு தன்னுடைய இந்திய சர்ச் எஞ்சின் பகுதியில் அவரின் புகைப்படத்தை பகிர்ந்து சிறப்பு செய்திருக்கிறது கூகுள் நிறுவனம். கூகுள் கூடுலில் ஒரு பகுதி சற்று மங்கலான தோற்றத்திலும் நடுவில் மருத்துவரின் புகைப்படமும் அதனையடுத்த பகுதியில் தெளிவான புகைப்படமும் வருமாறு அமைக்கப்பட்டிருக்கிறது அந்த வடிவமைப்பு.